நேருவை இழிவுபடுத்த இப்படி செய்யாதீங்க.. பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத்துக்கு நேதாஜி உறவினர் கண்டனம்
டெல்லி: பாஜக வேட்பாளரும், பிரபல திரைப்பட நடிகையுமான கங்கனா ரனாவத், நாட்டின் முதல் பிரதமர் நேதாஜி என கூறியிருந்தது கடும் விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில், இவரது கருத்துக்கு நேதாஜியின் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
சர்ச்சை கருத்துக்களுக்கு எப்போதும் கங்கனா ரனாவத் பெயர் போனவர். முன்பு ஒருமுறை இந்திய சுதந்திரம் குறித்து அவர் கூறியிருந்த கருத்து பெரும் புயலையே கிளப்பியிருந்தது. அதாவது, 1947ல் நமக்கு கிடைத்தது சுதந்திரம் கிடையாது, பிச்சை என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் தாண்டி, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், தற்போது மற்றொரு கருத்து மூலம் ரனாவத் கண்டனங்களை பெற்று வருகிறார்.

இரு தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அவர், "எனக்கு ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்துங்கள். நம்முடைய நாடு சுதந்திரம் கிடைத்தபோது, நம் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கு சென்றார்?" என கேள்வி எழுப்பியிருந்தார். இதை கேட்ட நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் அனைவரும் ஷாக்காகி போயினர். கங்கனாவின் பேச்சு சோஷியல் மீடியாக்களில் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சியினர் கங்கனாவின் கருத்து குறித்து கடுமையாக விமர்சித்தனர். ஆனால், மறுபுறம் பாஜகவினரும், கங்கனாவின் ஆதரவாளர்களும் இவரது கருத்துக்கு நியாயம் கூறி வந்தனர். இப்படி இருக்கையில் கங்கனாவின் கருத்துக்கு நேதாஜியின் குடும்பத்தினரே கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நேதாஜியின் உறவுமுறை மருமகனான சந்திர குமார் போஸ், "வங்காளம் மற்றும் பஞ்சாப் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவின் முதல் பிரதமராக நேரு இருந்தார். இதுதான் வரலாறு. இதை யாராலும் மாற்ற முடியாது. கடந்த 1943 அக்டோபர் 21ம் தேதி சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட 'ஆசாத் ஹிந்து'-வின் பிரதமராக சுபாஷ் சந்திர போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வரலாறு இவ்வாறு இருக்கையில், நேருவை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக நேதாஜியின் பெயரை பயன்படுத்த முயற்சிப்பது வருந்தத்தக்கது. நேதாஜியை பொருத்தமட்டில், நேரு, காந்தி, சித்தரஞ்சன் தாஸ் ஆகியோருடன் கடந்த 1921 முதல் 1941 வரை காங்கிரஸில் இருந்தார். நேதாஜிக்கும் நேருவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்து கொண்டனர்" என்று கூறியுள்ளார். இவருடைய கருத்து தற்போது சோஷியல் மீடியாக்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
சந்திர குமார் போஸ் ஏற்கெனவே பாஜகவில் இருந்தார். ஆனால் பின்னர் விலகிவிட்டார். கங்கனா ரனாவத் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications