"அரிசிக்காக மதம் மாறிய கிறிஸ்தவர்கள்.." என்று கூறியவர் ஜேஎன்யூ பல்கலை. துணைவேந்தராம்! சர்ச்சை
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட், அரசுக்கு ஆதரவாகவும், முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து போட்டிருந்த ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது.
இந்தியாவில் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்று டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம். இங்கு படிப்பதற்கு மாணவர்களிடையே பெரிய போட்டியே இருக்கும். இங்கு படிப்பதை மாணவர்கள் கெளரவமாகக் கருதுவார்கள்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஜெகதீஷ் குமார் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சாந்தி ஸ்ரீ துலிபுடி பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

சாந்தி ஸ்ரீ துலிபுடி
சாந்தி ஸ்ரீ ரஷ்யாவில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை பி.ஏ., வரலாறு மற்றும் சமூக உளவியல் மற்றும் எம்.ஏ., முதுகலை அரசியல் அறிவியல் பட்டங்களைப் பெற்றவர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட். இவர் தற்போது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றவர். இப்போது அங்கேயே துணை வேந்தராக செல்லவிருக்கிறார்.

துணை வேந்தர்
மகாராஷ்டிராவில் உள்ள சாவித்திரிபாய் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் சாந்திஸ்ரீ பண்டிட்டை, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்து மத்திய கல்வி அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது. 'துணை வேந்தராக பணியாற்ற வாய்ப்பு அளித்த பிரதமருக்கும், கல்வி மந்திரிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தை சேர்ந்த என்னை டெல்லி பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தராக நியமித்தது மகிழ்ச்சி' என்று சாந்தி ஸ்ரீ பண்டிட் தன்னுடைய ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

சர்ச்சை
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தராகப் பொறுப்பேற்க உள்ள நிலையில், சாந்தி ஸ்ரீ இதற்கு முன் பதிவிட்ட ட்விட்டர் பதிவால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்தப் பதிவுகள் சர்ச்சையானதும், தன்னுடைய டிவிட்டர் கணக்கை மூடிவிட்டார். ஆனால், அந்த பதிவுகள் போட்டோக்களாக ட்விட்டரில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

முஸ்லிம் வெறுப்பா?
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இத்தாலியின் ரிமோட் கண்ட்ரோல் என்கிறார். முஸ்லிம்களின் லவ் ஜிகாத் பயங்கரவாதம் என்ற கோணத்திலும் ட்வீட் செய்துள்ளார். கிறிஸ்தவர்களை அரிசி மூட்டைக்காக மதம் மாறியவர் என்று குறிப்பிட்டுள்ளார். ஜே.என்.யூ, ஜாமியா கல்லூரி மாணவர்கள் குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்துள்ளார் சாந்தி ஸ்ரீ பண்டிட். இந்நிலையில்தான் அவர் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசுக்கு ஆதரவாகவும், சிறுபான்மையினருக்கு எதிராகவும் பேசியவரை நாட்டின் முக்கிய கல்வி நிலையத்தின் தலைவராக செயல்பட அனுமதிக்கலாமா என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications