"மேஜிக் எல்லாம் எதுவும் இல்லை!" காங்கிரஸ் மறுசீரமைப்பு.. சோனியா காந்தி ஓபன் டாக்
டெல்லி: டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், கட்சி மறுசீரமைப்பு குறித்து சோனியா காந்தி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அக்கட்சியின் தலைமையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று அக்கட்சியில் இருந்து குரல்கள் எழுந்துள்ளன.
இதனிடையே காங்கிரஸ் கட்சியில் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கடைசி நேரத்தில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவது நடக்காமல் போனது.

காங்கிரஸ் உயர்மட்ட குழு
இதையடுத்து காங்கிரஸ் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக மூத்த நிர்வாகிகள் உடன் ஆலோசிக்க வரும் மே இரண்டாவது வாரத்தில் ராஜஸ்தானின் உதய்பூரில் சிறப்பு அமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த சிறப்பு அமர்வுக்கு முன்னதாக காங்கிரஸ் உயர்மட்ட குழு இன்று கூடியது.

மூத்த தலைவர்கள்
காங்கிரஸ் கட்சியின் சீர்திருத்தங்கள், சமூக நீதி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பிற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மறுசீரமைப்பு
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, "காங்கிரஸ் அனைவருக்கும் நல்லதையே செய்து வந்துள்ளது. இப்போது, அதை நாம் கட்சிக்குத் திரும்பச் செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்க மந்திரக்கோல்கள் எதுவும் இல்லை. ஒழுக்கம், நிலையான கூட்டு முயற்சி மட்டுமே நமது உறுதியை வெளிப்படுத்தும். ராஜஸ்தானில் நடக்கும் கூட்டம் வெறும் சடங்காக இருக்கக் கூடாது. கட்சியை மறுசீரமைக்கத் தேவையான நடவடிக்கை குறித்து அதில் முறையாக விவாதிக்க வேண்டும்.

மாற்றம் வருமா
நமது கட்சியில் இருக்கும் அமைப்புகளில் இருந்து சுயவிமர்சனம் தேவை. ஆனால் தன்னம்பிக்கை, மன உறுதியைக் குலைக்கும் வகையிலான சுயவிமர்சனமாக அது இருக்கக் கூடாது. காங்கிரஸின் விரைவான மறுமலர்ச்சிக்கு ஒற்றுமை, உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவை தேவை" என்று சோனியா காந்தி இந்தக் கூட்டத்தில் பேசினார். ராஜஸ்தானின் உதய்பூரில் வரும் மே 13 முதல் 15 வரை நடைபெறும் இந்த கூட்டம் காங்கிரஸ் கட்சிக்கு மறுமலர்ச்சியை அளிக்குமா என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications