"270+ பேர் பரிதாபமாக பலி.. மோடி அரசு எங்கும் ஓடிவிட முடியாது!" ஆவேசமான ராகுல் காந்தி.. கடும் தாக்கு
டெல்லி: ஒடிசா ரயில் விபத்து நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸின் ராகுல் காந்தி மத்திய அரசை இந்த விவகாரத்தில் மீண்டும் சாடியுள்ளார்.
ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை மிக மோசமான ரயில் விபத்து அரங்கேறியது. இரண்டு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் இந்த விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. சமீப காலங்களில் நடந்த மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
இதில் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் சுமார் 10 பெட்டிகள் தடம் புரண்டன. அதன் மீது ஹவுரா ரயிலும் மோத விபத்து மிகவும் மோசமானதாக மாறிவிட்டது.

விபத்து: கொல்கத்தாவில் இருந்து சென்னைக்குத் தினசரி இயக்கப்படும் ரயில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தான் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இது கிழக்கு கடற்கரையை ஒட்டி பயணித்து ஒடிசா, ஆந்திரா வழியாக மறுநாள் சென்னை வந்தடையும். கடந்த வெள்ளிக்கிழமையும் இந்த ரயில் ஒடிசாவில் பாலசோர் என்ற இடத்திற்கு வந்த போது இது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் தான்.
வெள்ளிக்கிழமை தொடங்கிய மீட்புப் பணிகள் நேற்று சனிக்கிழமை மதியம் வரை தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து இப்போது ரயில் பாதையைச் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த ரயில் விபத்தில் இதுவரை 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பல நூறு பேர் காயமடைந்துள்ளனர். அதில் 793 பேர் நேற்றே டிஸ்சார்ஜ் ஆனதாக ஒடிசா சுகாதாரத் துறை நேற்று அறிவித்திருந்தது. மற்றவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தாக்கு: இதற்கிடையே இந்த ஒடிசா பால விபத்து விவகாரத்தில் மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒடிசா ரயில் விபத்தில் 270+ பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், இதுவரை இதற்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. இத்தகைய வேதனையான விபத்துக்குப் பொறுப்பேற்காமல் மோடி அரசு எங்கும் ஓடிவிட முடியாது. உடனடியாக ரயில்வே அமைச்சரை ராஜினாமா செய்யப் பிரதமர் வலியுறுத்த வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி மட்டுமின்றி பல்வேறு அரசியல் தலைவர்களும் ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் விபத்திற்குப் பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளதைக் குறிப்பிட்டு, அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சரத் பவார், திக்விஜய சிங், மம்தா எனப் பல தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
என்ன காரணம்: இந்த விபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து இப்போது வரை ரயில்வே அமைச்சகம் அல்லது மத்திய அரசு எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், சிக்னல் பிரச்சினை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல இன்று செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவும் விபத்திற்கான மூல காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறியிருந்தார். இருப்பினும், அவரும் என்ன காரணம் என்பதை விளக்கவில்லை.
இந்தச் சூழலில் தான் இந்த விபத்து குறித்த முழு விசாரணையையும் சிபிஐக்கு ரயில்வே துறை பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications