"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்!
டெல்லி: வளைகுடா போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வரும் எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய்யில் பெரும்பகுதி அந்த வழியாகவே வரும் சூழலில் இதனால் இந்தியா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹார்முஸ் விவகாரம் தொடர்பாக இந்தியா கவலைப்படத் தேவையில்லை என்று ஈரான் கூறியுள்ளது. இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல வழிவகை செய்யப்படும் என ஈரான் முன்பு உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்தது. இந்த போரின் முதல் நாளே ஈரானின் உச்ச தலைவராக இருந்த அலி கமேனி கொல்லப்பட்டார். இதனால் போர் விரைவாக முடிவுக்கு வந்துவிடும் என்றே பலரும் நினைத்தனர். இருப்பினும், ஈரான் சரணடையாமல் தொடர்ந்து போரை நடத்தியது. இதனால் மோதல் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்கிறது.

ஹார்முஸ்
வளைகுடாவில் வெடித்துள்ள இந்த போரால் உலகெங்கும் பாதிப்புகள் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. ஏனென்றால் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளது. இதனால் அங்கு வழக்கமான கப்பல் போக்குவரத்து நடைபெறுவதில்லை. உலகின் 20% எரிசக்தி சரக்குகள் இந்த ஜலசந்தி வழியாகவே செல்கிறது. இது முடக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு மிக மோசமாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக தெற்காசிய நாடுகளில் தான் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி சப்ளை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரான்
இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டிருக்கும் கப்பல் போக்குவரத்து இடையூறுகள் குறித்து இந்தியா கவலைப்படத் தேவையில்லை என்று ஈரான் கூறியிருக்கிறது. இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை இந்தியாவிற்கான ஈரான் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "எங்கள் இந்திய நண்பர்களே, நீங்கள் பாதுகாப்பான கரங்களில் உள்ளனர், கவலை வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளது..
என்ன நிலைமை
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மொத்தமாக முடக்கிவிடவில்லை. குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளித்து வருகிறது. இப்போது இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக், பாகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களை அனுமதிக்க முடியாது என ஈரான் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
இந்தியக் கப்பல்கள்
என்னதான் இந்தியக் கப்பல்களை அனுமதித்தாலும் சில சிக்கல்களால் அனைத்து இந்தியக் கப்பல்களும் அதைக் கடந்துவிடவில்லை. இதுவரை ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து சுமார் எட்டு இந்தியக் கப்பல்கள் வெளியேறிவிட்டன. ஆனால், இந்தியாவுக்காக LPG, கச்சா எண்ணெய், LNG போன்றவற்றை ஏற்றி வந்த 19 கப்பல்கள் தற்போது சிக்கித் தவிக்கின்றன. இதை மத்திய அரசும் உறுதி செய்துள்ளது. அந்த கப்பல்களைப் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரத் தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications