வெளிவரும் உண்மை! லோக்சபாவில் கலர் புகை குண்டு போட்ட நால்வருக்கு 7 நாள் போலீஸ் காவல்! அடுத்து என்ன
டெல்லி: நாடாளுமன்ற வளாகம் மற்றும் லோக்சபாவில் நுழைந்து ஸ்பிரே அடித்ததோடு, கலர் புகை குண்டு வீசியது தொடர்பான வழக்கில் கைதான பெண் உள்பட 4 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல் வழங்கி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் இன்னும் பல விஷயங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.
நாடாளுமன்றத்தின் லோக்சபாவுக்குள் நேற்று அத்துமீறி நுழைந்த நபர்கள் ஸ்பிரே அடித்தும் கலர் புகை குண்டுகளையும் வீசினர். இதுதொடர்பாக சாகர் சர்மா மற்றும் டி மனோ ரஞ்சன் (வயது 35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்பிரே அடித்தது ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இவர்களுக்கு 2 பேர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னொருவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே தான் நேற்று கைது செய்யப்பட்ட சாகர் சர்மா, மனோ ரஞ்சன், அமோல் ஷிண்டே, நீலம் ஆகியோரிடம் டெல்லி தனிப்படை போலீசார் மற்றும் தீவிரவாத ஒழிப்பு படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் பல்வேறு முக்கிய தவல்கள் கிடைத்துள்ளன. இதற்கிடையே தான் இன்று மாலையில் அவர்கள் 4 பேரையும் போலீசார் டெல்லி பாட்டியலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கு தொடர்பாக அவர்களிடம் இன்னும் தீவிரமாக விசாரண நடத்தப்பட வேண்டி உள்ளது. இதனால் அவர்கள் நால்வரையும் 15 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என டெல்லி போலீஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவத்சவா வாதாடினார்.
இதனை கேட்ட நீதிமன்றம் கைது செய்யப்பட்டுள்ள சாகர் சர்மா, மனோ ரஞ்சன், அமோல் ஷிண்டே, நீலம் ஆகிய நால்வரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் நால்வரையும் காரில் போலீசார் நீதிமன்றத்தில் இருந்து அழைத்து சென்றனர். இன்று முதல் அடுத்த 7 நாட்கள் அவர்கள் 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இந்த வேளையில் அவர்களின் முழு பின்னணி உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் வெளிவரும் என போலீசார் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications