என்ன சொல்றீங்க? அமெரிக்காவில் உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. ஆனாலும் இந்தியாவை விட கம்மிதானாம்
டெல்லி: உக்ரைன் போர் காரணமாகச் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், பெட்ரோல் - டீசல் விலையும் உயர்ந்து வருகிறது.
உக்ரைன் நாட்டில் ரஷ்யா தொடங்கிய போர் 3ஆவது வாரமாகத் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் நகரில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறித்து வைத்து ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
கீவ், கார்கீவ், மரியுபோல் நகரங்கள் மீது ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடும் ஏற்படவில்லை.

உக்ரைன் போர்
இதனால் உக்ரைன் ரஷ்யா நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளும் கடுமையாகப் பாதித்துள்ளன. கொரோனாவில் இருந்து மெல்ல மீண்டு வந்த சர்வதேச பொருளாதாரம் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. புதினின் இந்தப் போர் நடவடிக்கை காரணமாக கடும் அதிருப்தி அடைந்துள்ள உலக நாடுகள், ரஷ்யா மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன், அமெரிக்க அதிபர் பைடன் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளார்.

அமெரிக்கா
உக்ரைன் போர் தொடங்கியது முதலே அமெரிக்காவில் பெட்ரோல் விலை மின்னல் வேகத்தில் உயரத் தொடங்கியது. அதிலும் அதிபர் பைடன் ரஷ்யக் கச்சா எண்ணெய் இறக்குமதிக்குத் தடை விதித்த உடன் இன்னும் வேகமாக உயரத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் லிட்டர்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் நிலையில், அமெரிக்காவில் கேலன் முறையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவைப் போலவே அங்கும் ஒவ்வொரு மாகாணத்தில் இருக்கும் வரியைப் பொருத்து பெட்ரோல், டீசல் விலை மாறுபடும்.

அமெரிக்காவில் என்ன விலை
அமெரிக்காவில் இப்போது சராசரியாக ஒரு கேலன் பெட்ரோல் 4.31 டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ 329) விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல டீசல் ஒரு கேலன் 5.05 டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ 386.22) விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2008 ஜூலை மாதம் பெட்ரோல் அங்கு கேலனுக்கு 4.31 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் சுமார் 14 ஆண்டுகளில் பெட்ரோல் விலை உச்சம் தொட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

இந்தியாவை விட குறைவு
அதேநேரம் ஒரு கேலன் என்பது 3.78 லிட்டர் என்பதால் அமெரிக்காவில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 86.97 ரூபாயாகவே உள்ளது. அமெரிக்காவில் 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை உச்சம் தொட்டுள்ள போதிலும், அது இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் பெட்ரோல் விலையைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்துவிட்டது. மும்பையில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 109.98க்கும் சென்னையில் ரூ 101.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வரும் காலங்கள்
இந்தியாவில் வரும் காலத்தில் பெட்ரோல் விலை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. நாட்டில் கடந்த நவ. 4ஆம் தேதி கடைசியாக பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 82 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்தியாவில் பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இதற்கு 5 மாநில தேர்தல் முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது. தற்போது தேர்தல்களும் முடிந்துள்ள நிலையில், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலையும் 140 டாலரை தாண்டி உள்ளது.

அதிகரிக்கலாம்
அதேபோல அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் தற்போது 77 ரூபாயாக உள்ளது. போர் தொடரும்பட்சத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 86%ஐ இறக்குமதி செய்வதால். இந்திய ரூபாயின் வீழ்ச்சி என்பதை இதைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே, வரும் காலத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வேகமாக உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications