உக்ரைனுக்கு நாங்க எவ்ளோ செஞ்சிருக்கோம் தெரியுமா? அமெரிக்க அதிபரிடம் நெகிழ்ந்து பேசிய பிரதமர் மோடி
டெல்லி: போரால் பாதிக்கப்பட்டு உள்ள உக்ரைனின் நிலை தனக்கு மிகுந்த கவலையை தருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான வீடியோ கான்ஃபரன்ஸில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
ரஷியா - உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாடினார்.
ரஷியா - உக்ரைன் போர் தொடர்பாக இந்தியாவின் நிலைபாடு குறித்து அமெரிக்கா அதிருப்தியில் இருந்த நிலையில் இருநாடுகளின் தலைவர்களும் பேசியுள்ளனர்.

உக்ரைன் நிலை கவலையளிக்கிறது
இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "உக்ரைனின் நிலைமை மிகவும் மோசமடைந்து கவலையளித்து வரும் நேரத்தில் நமது சந்திப்பு அமைந்து உள்ளது. உக்ரைனுக்கு தேவையான அனைத்து விதமான மனிதாபிமான உதவிகளையும் இந்தியா இடைவிடாமல் வழங்கி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இளம் மாணவர்கள்.

பிரதமர் மோடி நம்பிக்கை
உக்ரைனின் புச்சா நகரில் அரங்கேறி இருக்கும் படுகொலைகள் வேதனை அளிக்கின்றன. இந்தியா அதற்கு உடனடியாக கண்டனம் தெரிவித்தது. நியாயமான விசாரணை நடத்தவும் வலியுறுத்தினோம். ரஷியா - உக்ரைன் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் அமைதிக்கான வழியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இரு நாட்டு அதிபர்களுடன் பேசினேன்
நான் பல முறை ரஷியா அதிபருடனும் உக்ரைன் அதிபருடனும் தொலைபேசியில் உரையாடி இருக்கிறேன். அவர்களிடம் அமைதிக்கு திரும்புமாறு மட்டும் நான் வலியுறுத்தவில்லை. உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பேச்சுவார்த்தை நடத்தவும் கூறினேன். இந்திய நாடாளுமன்றத்திலும் உக்ரைன் தொடர்பாக விரிவாக பேசி இருக்கிறோம்.

மருந்துகளை வழங்கும் இந்தியா
நாங்கள் உக்ரைன் மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகிறோம். உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கு ஏராளமான மருந்துகளையும் நிவாரண பொருட்களையும் அனுப்பி வைத்து இருக்கிறோம். உக்ரைனின் கோரிக்கையை ஏற்று மீண்டும் மருந்துகள் இந்தியாவிலிருந்து அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இந்தியா - அமெரிக்கா கூட்டணி
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நான் வாஷிங்டன் வந்தபோது, இந்தியா - அமெரிக்கா இடையிலான கூட்டணி பல சர்வதேச பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என தெரிவித்தீர்கள். அதை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன். உலகின் மிகவும் பழமையான பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையிலேயே கூட்டாளிகள். நீங்கள் அமெரிக்க அதிபராக பதவியேற்கும்போது ஜனநாயகத்தை வழங்க முடியும் என்று கூறினீர்கள். இந்தியா - அமெரிக்கா இடையிலான கூட்டணி வெற்றியடைவதே நீங்கள் சொல்லியதை சாத்தியப்படுத்துவதற்கான சிறந்த வழி." என்றார்.












Click it and Unblock the Notifications