பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு: விசாரணையில் இறங்கிய மத்திய உள்துறை அமைச்சகம்.. குழு அமைப்பு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் 42,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். மோசமான வானிலை காரணமாக பிரதமர் ஹெலிகாப்டரில் செல்லாமல் சாலை மார்க்கமாக சென்றார்.
பதிண்டா என்ற இடத்தில் சென்றபோது விவசாயிகள் அந்த பகுதியில் மறியலில் ஈடுபட்டதால் பிரதமர் வாகனம் மேற்கொண்டு செல்ல முடியாமல் தவித்தது. பதிண்டா பகுதி மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் காண்வாய் சுமார் 20 நிமிடங்கள் வரை நின்றது.

பயணத்தை ரத்து செய்த பிரதமர்
இந்த பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்தார். பிரதமர் சாலை வழியாக பயணிக்கும்போது பஞ்சாப் அரசு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதனை பஞ்சாப் அரசு செய்ய தவறி விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக குற்றம்சாட்டியது. இது தொடர்பாக பஞ்சாப் அரசு விசாரிக்க வேண்டும் என்றும் விட்டது.

பஞ்சாப் முதல்வர் விளக்கம்
உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பிரதமரின் பாதுகாப்பு குறைபாட்டுக்கு பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி '' பிரதமர் மோடி விமானம் மூலம் வருவதாக முதலில் திட்டமிட்டிருந்தார், ஆனால் எங்களுக்கு தெரிவிக்காமல் சாலை வழியாக வந்தார். ஆனாலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்றார்.

குடியரசுத் தலைவரை சந்தித்த மோடி
பஞ்சாப்பில் என்ன நடந்தது? என்பது குறித்து பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து விளக்கம் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் பெரோஸ்பூர் போலீஸ் எஸ்.பி ஹர்மன் ஹன்ஸ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், பாதுகாப்பு குளறுபடி காரணமா என்பது பற்றி விசாரணை நடத்த விசாரணை குழுவை பஞ்சாப் அரசு அமைத்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி மெஹ்தாப் சிங் கில் மற்றும் உள்துறை மற்றும் நீதித்துறை முதன்மைச் செயலர் அனுராக் வர்மா ஆகியோர் அடங்கிய குழு 3 நாட்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணையில் இறங்கிய மத்திய உள்துறை அமைச்சகம்
இந்த நிலையில் பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. கேபினட் செயலகத்தின் செயலாளர் (பாதுகாப்பு) ஸ்ரீ சுதிர் குமார் சக்சேனா தலைமையில் இணை இயக்குநர் ஸ்ரீ பல்பீர் சிங், எஸ்பிஜி ஐஜி, ஸ்ரீ எஸ். சுரேஷ் ஆகியோர் கொண்ட 3 பேர் குழு தீவிரமாக விசாரித்து விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications