நாட்டில் அதிகரிக்கும் வெப்பம்..பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம்.. ஏன் முக்கியம்?
கோடை காலம் துவங்குவதற்கு முன்பாகவே வெப்பநிலை அதிகரித்துள்ளதால் வரும் காலங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: நாட்டில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக வெப்பம் தகிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், வெப்பமான தட்ப வெப்ப நிலையை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர் மட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நாட்டில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வருகிறது. கோடை காலம் துவங்குவதற்கு முன்பாகவே வெப்பநிலை அதிகரித்துள்ளதால் வரும் காலங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதிக வெப்பமான ஆண்டாக இருந்தது. நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகி இருந்தது.

வெயில் அதிகரிப்பு
அதேபோல், கடந்த 2009, 2010, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளிலும் இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. நடப்பு ஆண்டிலும் கோடைக்கால துவக்கத்திலேயே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வெப்பம் அதிகரிப்பால் நோய்கள் தாக்கத்தொடங்கும் நிலை உள்ளது. குறிப்பாக வெப்பத்தளர்ச்சி, மயக்கம், சிறுநீர்க்கடுப்பு, வயிற்றுப்போக்கு, அம்மை நோய் போன்ற நோய்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும்.

மாநிலங்களுக்கு கடிதம்
இதனால், வெப்ப நோய்கள் தொடர்பாக மாநில அரசுகளை உஷார்படுத்தும் விதமாக கடந்த மாதம் 28 ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் மாநில தலைமைச் செயலாளர்களுக்கு அண்மையில் கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில், கோடை காலத்தில் சுகாதார வசதிகளை மாநிலங்கள் திறம்பட தயார்படுத்தவேண்டும். வெப்ப நோய்க்கான மருந்துகள், குளுக்கோஸ் திரவங்கள், ஐஸ் பைகள் மற்றும் கருவிகள் அனைத்தும் போதுமான அளவில் வைத்துக்கொண்டு, சுகாதார தயார் நிலையில் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இருக்க வேண்டும்.

பயிர் விளைச்சலும் பாதிக்கப்படும்
எல்லா சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளிலும் போதுமான அளவு குடிநீர் இருக்க வேண்டும். குளிரூட்டும் சாதனங்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு இருந்தன. மே 31 ஆம் தேதி வரையிலான இந்த மூன்று மாத காலத்தில் வழக்கத்திற்கு மாறான வெப்ப நிலை அதிகரிப்பதோடு வெப்ப அலையும் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், பயிர் விளைச்சலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில், வரும் கோடைக்காலத்தில் நாட்டில் ஏற்படும் வெப்பமான தட்பவெப்பநிலையை எதிர்கொள்வதற்கான தயார் நிலைகள் குறித்து உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டில் வெப்பம் தொடர்பான வானிலை முன்னறிவிப்புகளை வனிலை ஆய்வு மையம் தினசரி தயாரிக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் கூறியதாவது:-

பிரதமர் மோடியிடம் எடுத்துரைப்பு
பருவமழை குறித்த முன்னறிவிப்பு மற்றும் ராபி பருவ கால பயிர் விளைச்சலில் ஏற்படும் தாக்கம், மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலை, வெப்ப தடுப்பு தொடர்பான தயார்நிலைகள் ஆகியவை குறித்தும் பிரதமர் மோடியிடம் இந்த ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். கடும் வெயில் காரணமாக ஏற்படக்கூடிய தீ விபத்து போன்றவற்றை தடுப்பது குறிப்பாக மருத்துவமனைகளில் தீ தடுப்பு குறித்த தணிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

விளம்பரப்படுத்த வேண்டும்
காட்டுத்தீயை சமாளிக்க ஒருங்கிணைந்த முயற்சிக்கான தேவை ஆகியவை குறித்தும் பிரதமர் மோடி கூட்டத்தில் சுட்டிக்காட்டினார். வெப்ப காலத்தில் என்ன செய்ய வேண்டும்.. எதை செய்யக்கூடாது என்பது குறித்தும் அனைவருக்கும் தெரியும் வகையில் துண்டு பிரச்சுரங்கள், படங்கள் மூலமாக விளம்பரப்படுத்த வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான தீவனம் மற்றும் நீர் நிலைகளில் தண்ணீர் இருப்புகள் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

சேமித்து வைப்பதை உறுதி செய்ய வேண்டும்
மேலும், கடுமையான வெப்ப சூழலில் தானியங்களை தகுந்த வழியில் சேமித்து வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய உணவுக்கழகத்தை பிரதமர் கேட்டுக்கொண்டார். இந்தக் கூட்டத்தில் பிரதமரின் முதன்மை செயலாலர், கேபினட் செயலர், உளதுறை, செயலர், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலர் , தேசிய பேரிடம் மேலாண்மை ஆணையம் உள்பட முக்கிய துறைகளின் செயலர்கள் கலந்து கொண்டனர்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications