"நச்".. தீவிரவாதத்திற்கு உதவும் நாடுகள்.. பாகிஸ்தான், சீனாவிற்கு "ஊமைக் குத்து".. மோடி பரபர பேச்சு
டெல்லி: தீவிரவாதத்துக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி சீனா, பாகிஸ்தான் நாடுகளை கடுமையாக சாடியது உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அண்மைக்காலமாக இந்தியா - சீனா இடையேயான மோதல்போக்கு அதிகரித்து வரும் நிலையில் மோடி இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு எதிராக பிற நாடுகள் ஓரணியில் திரள வேண்டும் என்றும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

தீவிரவாதத்தின் கோர முகம்..
'No Money for Terror' என்ற தலைப்பில் டெல்லியில் இன்றும், நாளையும் சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இதில் பல நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேசுகையில், "தீவிரவாதத்துக்கு எதிராக ஒரு மாநாட்டை நடத்துவதற்கு இந்தியாவுக்கு அதிக தகுதி இருப்பதாக நான் நம்புகிறேன். ஏனெனில், தீவிரவாதத்தின் கோர முகத்தை உலகம் பார்ப்பதற்கு முன்பாகவே அதை பார்த்த நாடு இந்தியா. எண்ணற்ற தீவிரவாத தாக்குதல்களின் வடுக்களை இந்தியா தனது நெஞ்சில் தாங்கியுள்ளது.

ஒருபோதும் அடிபணிந்ததில்லை..
அந்தக் காலக்கட்டத்தில் இருந்தே தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா குரல் கொடுத்து வந்தது. ஆனால், தீவிரவாதத்தை சந்திக்காத பல நாடுகள் அப்போது இந்தியாவின் பேச்சுக்கு பெரிதாக செவிசாய்க்கவில்லை. ஆனால், அவரவர் நாடுகளில் தீவிரவாதம் தலைதூக்கிய பிறகுதான் அவர்களுக்கு இந்தியாவின் குரல் கேட்டது. இன்று கிட்டத்தட்ட எல்லா நாடுகளுமே தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பல தசாப்தங்களாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டாலும் ஒருபோதும் அதற்கு இந்தியா அடிபணிந்ததில்லை. தீவிரவாதத்துக்கு எதிராக தீரமாக சண்டையிட்டு வருகிறோம்.

கல்லுக்கு கல்.. பல்லுக்கு பல்..
இந்தியாவை பொறுத்தவரை, தீவிரவாதத்துக்கு எதிராக இரண்டு கொள்கைகளை தான் பின்பற்றுகிறது. ஒன்று, தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை அடியோடு வீழ்த்துவது. இரண்டாவது, தீவிரவாதிகள் எப்படி பேசுகிறார்களோ அதே பாணியில் அவர்களுக்கு பதிலளிப்பது. இந்த இரண்டு கொள்கைகளை வைத்து தான் தீவிரவாதத்துடன் நாங்கள் போராடுகிறோம். தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்றைக்கும் பிரயோஜனப்படாது. 'கல்லுக்கு கல்', 'அடிக்கு அடி' என்பதே தீவிரவாதத்தை எதிர்கொள்ள சரியான ஆயுதம்.

சீனா, பாகிஸ்தானுக்கு ஊமைக்குத்து..
தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமெனில், முதலில் அதற்கு கிடைக்கும் நிதி ஆதாரத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையில் இந்தியா முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. அதற்கு நல்ல பலனும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், ஒரு குறிப்பிட்ட நாடுகள் மட்டும் தீவிரவாதத்தை எதிர்த்தால் போதாது. பிற நாடுகளும் தீவிரவாதத்துக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும். சில நாடுகள் (பாகிஸ்தான்) இருக்கின்றன. அவை தீவிரவாதத்தை ஆதரிப்பதையும், அவற்றுக்கு நிதியுதவி வழங்குவதையுமே தங்கள் வெளியுறவுக் கொள்கையாக வைத்திருக்கின்றன. வேறு சில நாடுகள் (சீனா) இருக்கின்றன. அவை தீவிரவாதிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை தடுப்பதே வேலையாக வைத்திருக்கும். இவை மறைமுகமாக தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள். இதுபோன்ற நாடுகளை அடையாளம் கண்டு அவற்றை தனிமைப்படுத்த வேண்டும்" இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications