விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் புகை குண்டு வீச்சு-தடையை உடைத்து டெல்லி நோக்கி முன்னேறுவதால் பதற்றம்!
டெல்லி: டெல்லி- அம்பாலா சாலையில் சம்பு என்ற இடத்தில் டெல்லி நோக்கி திரண்டு வந்த விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். ஆனால் போலீசாரின் கண்ணீர் புகை குண்டு வீச்சு தாக்குதல்களையும் எதிர்கொண்ட படி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறி வருவதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து 2020-21-ம் ஆண்டு டெல்லியில் ஓராண்டு காலம் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் 800 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது. அப்போது விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டத்தின் போது தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என கூறி பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த 70,000 விவசாயிகள் டெல்லியில் இன்று போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன?: எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்; நாடு முழுவதும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். 2021 போராட்டத்தின் போது லக்கிம்பூரில் 8 விவசாயிகளை படுகொலை செய்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ10,000 ஓய்வூதியம் தர வேண்டும்; 2020-21 போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்பதுதான் டெல்லியை நோக்கி போராட வரும் விவசாயிகளின் கோரிக்கை.
யுத்த களமாக டெல்லி சாலைகள்: ஆனால் டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றால் லோக்சபா தேர்தல் நேரத்தில் மத்திய பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்பதால் விவசாயிகளை ஒடுக்க துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி எல்லைகளில் கான்கிரீட் தடுப்புகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லியின் ஒவ்வொரு எல்லைகளிலும் டெல்லி போலீசாரும் துணை ராணுவத்தினரும் இணைந்து யுத்தத்தை எதிர்கொள்வது போல முழு வீச்சில் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.
தடுத்து நிறுத்திய டெல்லி போலீஸ்: இந்த நிலையில் டெல்லி- அம்பாலா நெடுஞ்சாலையில் அதாவது பஞ்சாப்-ஹரியானா எல்லையில் சம்பு என்ற இடத்தில் டெல்லி நோக்கி பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களில் சென்று கொண்டிருந்த விவசாயிகளை போலீசாரும் துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசார் தடையை மீறி விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறினர்.
சரமாரி கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு: இதனையடுத்து டெல்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது போலீசார் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஆனாலும் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து டெல்லி நோக்கி முன்னேறி வருகின்றனர். இதனால் போலீசாரும் துணை ராணுவத்தினரும் செய்வதறியாமல் திகைத்து போயுள்ளனர். டெல்லி- அம்பாலா நெடுஞ்சாலை பெரும் போர்க்களமாக காட்சி தருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் போலீசார் விவசாயிகளை தடுத்து வருவதால் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications