இந்தியாவுக்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.. முலாயம் சிங் மறைவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இரங்கல்
டெல்லி: உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் காலமான நிலையில் அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
வட இந்தியாவில் சக்திவாய்ந்த கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடி கட்சியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ். இந்திய அளவில் அனுபவமும், பலமும் வாய்ந்த அரசியல்வாதியாக பார்க்கப்படுகிறார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் 1989 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரையிலும், 1993 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரையிலும், 2003 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையிலும் என 3 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

உடல்நலக்குறைவு
உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் தந்தையான இவர் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர அரசியலைவிட்டு விலகி இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 22 ஆம் தேதி முன்பாக முலாயம் சிங் யாதவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

காலமானார்
தொடர்ந்து முலாயம் சிங் யாதவின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார். அவருக்கு வயது 82. முலாயம் சிங் யாதவ் மறைவால் உத்தரப்பிரதேச மக்கள், சமாஜ்வாடி தொண்டர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

திரௌபதி முர்மு
முலாயம் சிங் யாதவ் மறைவு இரங்கல் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "முலாயம் சிங் யாதவின் மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்து முலாயம் சிங் யாதவ் சாதித்தது அசாதாரணமானவை.

மண்ணின் மைந்தன்
மண்ணின் மைந்தன் முலாயம் சிங் யாதவ் மைதானத்துடன் தொடர்புடைய மூத்த தலைவர். அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்படும் தலைவர். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications