நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பிரம்மாண்ட கிரானைட் சிலை.. பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
டெல்லி: இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு இந்தியா கேட் பகுதியில் கிரானைட்டல் ஆன பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை அடியோடு ஒழிக்க ராணுவ வீரர்களைத் திரட்டி பெரும் போர் புரிந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
கூடுதல் சிறப்பாக இந்த ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது.

அமர் ஜவான் ஜோதி
கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக தலைநகர் டில்லியில் இந்தியா கேட் பகுதியில் 1972ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி குடியரசு தினத்தன்று அமர்ஜவான் ஜோதி என்றும் அணையாத விளக்கு ஏற்றப்பட்டது. இந்த வழக்கு தற்போது வரை 50 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

போர் நினைவு சின்னம்
இதேபோல கடந்த 2019ஆம் ஆண்டு தலைநகர் டெல்லி இந்தியா கேட் பகுதியில் தேசிய போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது இந்த போர் நினைவு சின்னத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் பாகிஸ்தானுடன் நடந்த போர் முதல் தற்போது வரை நடந்த போர்களில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக இந்த சின்னம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் பெயர்களும் அங்கு பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமர்ஜவான் ஜோதியில் உள்ள அணையா விளக்கு தேசிய போர் நினைவு சின்னத்தில் அமைக்கப்பட்டுள்ள அணையா விளக்கு ஒன்று நீக்கப்படுவதாக இந்திய ராணுவம் அறிக்கை வெளியிட்டது.

நேதாஜிக்கு சிலை
இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடும் இந்த நேரத்தில் இந்தியா கேட் பகுதியில் கிரானைட் கற்களாலான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரம்மாண்ட சிலை நிறுவப்படும் என தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும். நேதாஜிக்கு இந்தியா கடமைப்பட்டுள்ள நிலையில் அவரது அடையாளமாக இந்த சிலை இருக்கும் என பிரதமர் கூறியுள்ளார்.
Recommended Video

மின் ஒளி சிலை
நேதாஜியின் பிரம்மாண்ட சிலை அமைக்கும் பணி முடிவடையும் வரை அங்கு அவரது உருவம் ஹாலோகிராம் எனப்படும் மின் ஒளியில் திரையிடப்படும் எனவும் அந்த மின் ஒளி வடிவிலான சிலையை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்த நாளான ஜனவரி 23ஆம் தேதி திறந்து வைக்க உள்ளேன் எனவும் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications