ஓட்டு மட்டும் கேட்டீங்க.. பிரஜ்வல் ஆபாச வீடியோ பற்றி ஏன் மவுனம்? மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி
டெல்லி: கர்நாடகாவின் ஹாசன் தொகுதி பாஜக கூட்டணியின் வேட்பாளரான ஜேடிஎஸ் கட்சியின் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட பிரதமர் மோடி, தற்போது ஆபாச வீடியோ விவகாரத்தில் ஏன் மவுனமாக இருக்கிறார்? என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடையதாகக் கூறப்படும் ஆபாச வீடியோக்கள் தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா, சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா ஏற்கனவே இந்தியாவை விட்டு தப்பி ஓடிவிட்டார். தற்போது நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணா ஆகியோர் மீது கர்நாடகா போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

பிரஜ்வல் ரேவண்ணாவின் சித்தப்பாவான முன்னாள் முதல்வர் குமாரசாமியோ, எங்களது தேவ கவுடா குடும்பத்தை இந்த விவகாரத்தில் இழுக்க வேண்டாம். ரேவண்ணா குடும்பம் தனியானது. எங்கள் குடும்பம் தனியானது. வெளிநாட்டுக்கு ஓடிப் போன பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டியது எஸ்.ஐ.டி. அதிகாரிகளின் பொறுப்பு என்றார்.
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக மகளிர் காகிரஸார் நேற்று கர்நாடகா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெங்களூர் போராட்டத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவின் உருவப்படத்துக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது.
பிரஜ்வல் ரேவண்ணா சர்ச்சை தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாவது: பிரதமர் மோடியுடன் இணைந்து நிற்கக் கூடியவர்; 10 நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி யாரை புகழ்ந்து பேசி யாருக்காக பிரசாரம் செய்தாரோ அந்த நபர் (பிரஜ்வல் ரேவண்ணா) இப்போது நாட்டை விட்டு தப்பி ஓடி இருக்கிறார். நெஞ்சை பதறவைக்கக் கூடிய கொடுஞ்செயல்கள் குறித்து (பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோக்கள்) குறித்து கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறேன். பல நூறு பெண்களின் வாழ்க்கையையே நாசமாக்கி இருக்கிற இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார்? . இவ்வாறு பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, பாஜகவின் தேவராஜ் கவுடா, கர்நாடகா பாஜக தலைமைக்கு டிசம்ப்ர் 8-ந் தேதி பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ குறித்து எழுதிய கடிதத்தை தமது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அத்துடன், ஏன் பாஜக இப்போதும் மவுனமாக இருக்கிறது? ஏன் இந்த பென் டிரைவ்வை பாதுகாப்பாக வைத்திருக்கிறது? எதற்காக பிரதமர் மோடி, பிரஜ்வல் ரேவண்ணாவுக்காக பிரசாரம் செய்தார்? ஒரே மேடையில் பிரஜ்வல் ரேவண்ணாவுடன் பிரசாரம் செய்தார்? என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications