இன்குலாப்... பஞ்சாபில் மிகப்பெரிய வெற்றி... நானா தீவிரவாதி.. கெஜ்ரிவால் ஆவேச உரை
கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி அல்ல, உண்மையான ‘தேச பக்தர்’ என்பதை மக்கள் காட்டியுள்ளனர் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி: மருத்துவம் படிக்க எந்த மாணவரும் உக்ரைனுக்கு செல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்த முடிவுகளின் மூலம் கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி அல்ல, உண்மையான தேசபக்தர் என்பதை மக்கள் அடையாளம் காட்டியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா,மணிப்பூரில் பாஜக ஆட்சியை தக்கவைத்தாலும் பஞ்சாப் மாநிலத்தில் படுதோல்வியடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஐந்து மாநிலங்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 90 இடங்களைக் கைப்பற்றி அரியணை ஏறுகிறது. இது மிகப்பெரும் புரட்சி என்று அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

மிகப்பெரிய தலைகள் உருண்டன
பஞ்சாப் தேர்தல் வெற்றி குறித்து டெல்லியில் மக்கள் மத்தியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் மாநில தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய புரட்சி என்று உற்சாகத்துடன் கூறினார். இந்த தேர்தலில் சுக்பீர் சிங் பாதல் தோற்றார். கேப்டன் அம்ரீந்தர் சிங், முதல்வர் சன்னி, பிரகாஷ் சிங் பாதல், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர். மிகப்பெரிய தலைவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். பஞ்சாப் மக்கள் நல்ல முடிவை கொடுத்துள்ளனர் என்றார்.

பகவந்த் மான்
தொடர்ந்து பேசிய அவர், எனது இளைய சகோதரர் பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்றதற்கு வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். ஆம் ஆத்மி 90 இடங்களைத் தாண்டியுள்ளது, முடிவுகள் இன்னும் வருகின்றன; மக்கள் எங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர், நாங்கள் அதை காப்பாற்றுவோம் இந்த நாட்டின் அரசியலை மாற்றுவோம் என்று கூறினார்.

எதுவும் மாறவில்லை
ஆங்கிலேயர் வெளியேறிய பிறகு நாம் அமைப்பை மாற்றாவிட்டால் எதுவும் நடக்காது என்று பகத்சிங் ஒருமுறை கூறினார். துரதிர்ஷ்டவசமாக கடந்த 75 ஆண்டுகளில், இந்த கட்சிகள் மற்றும் தலைவர்கள் அதே பிரிட்டிஷ் அமைப்பைக் கொண்டிருந்தனர், அவர்கள் நாட்டைக் கொள்ளையடித்தனர், பள்ளிகள்/மருத்துவமனைகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. ஆம் ஆத்மி அமைப்பை மாற்றிவிட்டது.

தேச பக்தர்
மருத்துவம் படிக்க எந்த மாணவரும் உக்ரைனுக்கு செல்லாத இந்தியாவை தனது கட்சி உருவாக்கும் என்று கெஜ்ரிவால் கூறினார். இந்த முடிவுகள் மூலம் மக்கள் கெஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி அல்ல, உண்மையான 'தேசபக்தர்' என்பதை நிரூபித்துள்ளனர் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications