குர்ஆன் மட்டுமல்ல.. நபிகள் நாயகம் சொன்னதும் இஸ்லாத்தில் கடமை -ஹிஜாப் வழக்கில் சல்மான் குர்ஷித் வாதம்
டெல்லி: குர்ஆன் மட்டுமின்றி நபிகள் நாயகத்தின் வார்த்தைகளும் இஸ்லாத்தில் கடமையானது என்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஹிஜாப் வழக்கில், ஆஜரான மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷீத் தெரிவித்து உள்ளார்.
கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல அரசு விதித்த தடைக்கு எதிராக உடுப்பி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.
அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

உச்சநீதிமன்றம்
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு முன்பு கடந்த திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. கடந்த 3 நாட்கள் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.

சல்மான் குர்ஷீத்
இந்த நிலையில் 2 நாள் ஒத்திவைப்புக்கு பிறகு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹிஜாப் தடைக்கு எதிராக வழக்கறிஞர் யூசுப் முச்சாலா மற்றும் மூத்த வழக்கறிஞரும் இந்திய முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான சல்மான் குர்ஷீத் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

குர்ஆன் பிரதிகள்
மேலும் நீதிபதிகளை நோக்கி, "உங்கள் முன் இரண்டு குர்ஆன் பிரதிகள் உள்ளன." என்று சல்மான் குர்ஷீத் தெரிவிக்க, இந்த புனித புத்தகத்தை நாங்கள் வைத்திருக்க விரும்பவில்லை. அதன் பிரிண்ட் அவுட் காப்பி இருந்தால் கொடுங்கள் என்று நீதிபதி குப்தா கூற, நீதிபதிகளுக்கான நூலகத்தில் அது இருக்கும் என்றார். உடனே நீதிபதி குப்தா நூலகத்தில் ஒரு குர்ஆன் உள்ளது என்றார்.

எது கடமை?
தொடர்ந்து வாதிட்ட சல்மான் குர்ஷீத், "இஸ்லாத்தில் கடமை மற்றும் கடமை இல்லை என்ற இரட்டை நிலை கிடையாது. குர்ஆனில் இருப்பது எப்படி கடமையாக உள்ளதோ அதேபோல் முஹம்மது நபி தெரிவித்த கருத்துக்களும், போதனைகளும் கடமைதான். அனைவரும் மனதில்கொள்ள வேண்டிய முக்கியமான விசயம் இது." என்றார்.












Click it and Unblock the Notifications