ரூ.100 கோடி.. "காசு கொடுத்தா எம்.பி, ஆளுநர் ஆகலாம்!" ஏலம் விட்ட கும்பல்! தட்டி தூக்கிய சிபிஐ
டெல்லி: காசு கொடுத்தா வாங்கிடலாம் என கூறி ராஜ்யசபா எம்.பி பதவியையும், கவர்னர் பதவியையும் ஏலம்விட்ட கும்பலினரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
இந்திய அரசியல் சாசனத்தின் மிக உயரிய பொறுப்புகளில் ஒன்று மாநில கவர்னர் பொறுப்பு. இந்திய குடியரசு தலைவர்களால் மாநில கவர்னர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அதேபோன்று, ராஜ்யசபா உறுப்பினர் பதவி பல்வேறு மாநிலங்களில் அவ்வப்போது காலியிடங்களுக்கு ஏற்ப நிரப்பப்படும். அதில் போட்டியிட்டு கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவார்கள்.

கையும் களவுமாக சிக்கிய கும்பல்
இந்த நிலையில், ஏதோ பெட்டி கடைகளில் சாக்லேட் வாங்கி கொடுப்பது போல ஒரு கும்பலினர் கவர்னர் மற்றும் ராஜ்யசபா எம்.பி பதவிகளை வாங்கி தருவதாக கூறி தொழிலதிபர்களிடம் ரூ.100 கோடி சுருட்ட முயன்றுள்ளனர். அந்த கும்பலினர் தங்களால் அனைத்தும் முடியும் என்றும், முடியாதது ஏதும் இல்லை என்றும் கூறி இத்தகைய மோசடிகளில் ஈடுபட முயன்றுள்ளனர். தற்போது இந்த கும்பலை சிபிஐ கையும் களவுமாக பிடித்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படும் தகவல்கள் வருமாறு:-

ரகசிய தகவல்
பெரிய, பெரிய தொழில் அதிபர்களிடம் ஒரு கும்பலினர் கவர்னர் பதவி, ராஜ்யசபா எம்.பி பதவி, மத்திய அரசின் பல்வேறு துறைகளின் வாரிய தலைவர்கள் போன்ற பதவிகளை வாங்கி தருவதாகவும் இதற்காக பணம் வசூலித்து வருவதாகவும் சிபிஐக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, இதனை தீவிரமாக கண்காணித்த சிபிஐ அதிகாரிகள் அந்த கும்பலை எப்படியாவது கைது செய்யவேண்டும் என எண்ணினர். அதன்படி, கடந்த சில வாரங்களாக அவர்களது தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து கேட்ட சிபிஐ அதிகாரிகள் இந்த மோசடி கும்பலை பிடித்துள்ளனர்.

4 பேர் கைது
இத்தகைய செயலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், சிலரின் அடையாளமும் தெரியவந்துள்ளது. அதன்படி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த கமலாக்கர் பிரேம்குமார் பண்டாகர், கர்நாடகாவின் ரவீந்திர விட்டல், டெல்லியைச் சேர்ந்த மஹிந்திர பால் அரோரா மற்றும் அபிஷேக் பூரா ஆகியோர் மீதுதான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கை
இதில் அபிஷேக்பூரா, உயர் அதிகாரிகளிடம் தனக்கு இருந்த தொடர்புகளை பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பண்டகர் என்பவர் தன்னை சிபிஐ அதிகாரி என பிற மோசடி நபர்களிடம் அடையாளப்படுத்திக்கொண்டு, எந்த வகையான வேலையையும் தன்னால் முடித்து தர முடியும் என்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். தன்னை மூத்த சிபிஐ அதிகாரி எனக்கூறிக் கொண்டு, போலீஸ் அதிகாரிகளை மிரட்டியதும், தனக்கு தெரிந்தவர்களுக்கு சாதகமாக வழக்குகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று போலீஸ் விசாரணையில் இடையூறு செய்ததாகவும் சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications