ஒரிஜினல் குற்றவாளி நீங்க இல்ல.. ராகுல் காந்தி சொன்ன 5 முக்கியமான பாயிண்ட்.. மோடிக்கு எகிறும் பிரஷர்
டெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான இந்திரா பவனில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு முக்கியமான செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசையும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரையும் கடுமையாக விமர்சித்து பல அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
நாட்டில் நடந்துள்ளதாகக் கூறப்படும் தேர்தல் முறைகேடுகள் மற்றும் 'வாக்குத் திருட்டு' விவகாரம் குறித்துப் பேசிய அவர், நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். இந்தச் சந்திப்பில் அவர் பேசிய 5 முக்கிய அம்சங்களை மிக எளிய நடையில் கீழே காணலாம்.

1. மத்திய அரசின் 200 அதிகாரிகள் எதிர்க்கட்சியுடன் தொடர்பில் உள்ளனர்
மத்திய அரசில் பணியாற்றும் சுமார் 200 முக்கிய அதிகாரிகள் தங்களோடு தொடர்பில் இருப்பதாக ராகுல் காந்தி பகிரங்கமாக அறிவித்துள்ளார். குறிப்பாக அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் போன்ற முக்கியத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மத்திய அரசின் உள்விவகாரங்கள் குறித்த ரகசியத் தகவல்களைத் தங்களுக்கு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
"மோடி அவர்களே, உங்கள் அரசுக்குள் இருக்கும் 200 அதிகாரிகள் எங்களிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பல உண்மைகளை அவர்கள் எங்களிடம் பகிர்ந்து வருகிறார்கள்" என்று அவர் நேரடியாகவே பிரதமருக்குத் தெரிவித்தார். இருப்பினும், அந்த அதிகாரிகளின் பெயர்களையோ அல்லது அவர்கள் அளித்த தகவல்களின் விவரங்களையோ அவர் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிடவில்லை.
2. போராட்டங்கள் அனைத்தும் ஒன்றே: இளைஞர்களுக்கு ஆதரவு
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாட்டில் பல தரப்பினரும் போராடி வருகின்றனர். இளைஞர்கள் தலைமையிலான 'காக்ரோச் ஜனதா கட்சி' உட்பட பல்வேறு மாணவர் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களையும், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா கூட்டணி' நடத்தும் போராட்டங்களையும் இணைத்துப் பேசினார் ராகுல் காந்தி.
"இங்கே தனித்தனியாக எந்தப் போராட்டமும் நடக்கவில்லை; அனைத்தும் ஒரே மக்கள் போராட்டம் தான். தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை, அதன்பின் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக எங்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்; நாங்கள் ஒருபோதும் ஓயமாட்டோம்" என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும், அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட்டு, தேர்தல் முறையில் நியாயமான சீர்திருத்தம் வரும் வரை நாட்டின் இளைஞர்கள் பின்வாங்க மாட்டார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
3. ஞானேஷ் குமார் அரசு சாட்சியாக மாற வேண்டும்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது ராகுல் காந்தி மிகக் கடுமையான குற்றச்சாட்டை வைத்தார். தேர்தல் ஆணையரிடமிருந்து தமக்குத் தகவல்கள் (மெசேஜ்கள்) வருவதாகவும், தேர்தல் முறைகேடுகள் காரணமாக அவர் கடும் மன உளைச்சலில் தூக்கமின்றித் தவிப்பதாகவும் ராகுல் கூறினார்.
"ஞானேஷ் குமார் அவர்களே, நீங்கள் உடனடியாகப் பதவி விலகி அரசு சாட்சியாக மாற வேண்டும். நீங்கள் ஒரு பெரிய தவற்றைச் செய்துவிட்டீர்கள். ஆனால், இந்தத் தவறின் பின்னணியில் உள்ள முதன்மை குற்றவாளி நீங்கள் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் உண்மைகளை வெளிப்படையாகப் பேசிவிடுங்கள்" என்று ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார். இதன் மூலம் தேர்தல் ஆணையம் உடனடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற அழுத்தத்தை எதிர்க்கட்சிகள் அதிகரித்துள்ளன.
4. தேர்தல் ஆணையரைப் பாதுகாக்க டெல்லி ஒரு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது
எதிர்க்கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் டெல்லியில் நடத்தத் திட்டமிடப்பட்ட பேரணிகளைத் தடுக்க மத்திய அரசு முழு நகரத்தையும் முடக்கியுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மக்கள் டெல்லிக்குள் வராதபடி பேருந்துகளும் ரயில்களும் தடுத்து நிறுத்தப்படுவதாகவும், 20,000 முதல் 30,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
"டெல்லியில் இவ்வளவு பெரிய போலீஸ் படையை நிறுத்துவது நல்லதே. ஏனென்றால், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பிரதமர் மோடி தான் தீவிரமாகப் பாதுகாக்கிறார் என்பதை நாடே இதன் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ளும்" என்று அவர் தெரிவித்தார். மேலும், "டெல்லி சாலைகளில் தடுப்புகளை அமைக்கலாம்; ஆனால் மக்கள் மனங்களில் எழும் எண்ணங்களைத் தடுப்புகளால் முடக்க முடியாது. தேர்தலில் முறைகேடு செய்யவில்லை என்பதற்கான ஆதாரத்தை மட்டும் மக்கள் கேட்கிறார்கள்" என்றும் அவர் வாதிட்டார்.
5. எதிர்க்கட்சி இளைஞர்கள் மீது அடக்குமுறை; பாஜகவினருக்கு முழு சுதந்திரம்
போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை டெல்லி காவல்துறை அச்சுறுத்துவதாகவும், ஆனால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார். காவல் துறையில் உள்ள பெரும்பாலான காவலர்கள் தங்களுக்கு இடப்படும் உத்தரவுகளைப் பிடிக்காமல் தான் பணிபுரிகிறார்கள் என்றும், எதிர்க்கட்சிகள் நியாயமான பாதையில் செல்வதாக அவர்களே தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்டார்.
அரசியல், சட்டம் மற்றும் மக்கள் கருத்து ஆகிய அனைத்துத் தளங்களிலும் இந்த அறப்போர் தொடரும் என்றும், நீதி கிடைக்கும் வரை எதிர்க்கட்சிகள் எதற்கும் அஞ்சாமல் முன்னேறும் என்றும் கூறி தனது பேச்சை ராகுல் காந்தி நிறைவு செய்தார்.




Click it and Unblock the Notifications
