அப்போ எதுக்கு வீர வசனம்.. ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி! EU தான் டாப்.. இந்தியாவை முந்திய அமெரிக்கா
டெல்லி: உக்ரைன் போர் தொடங்கி பின்னர், உலக நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
ரஷ்யா மீது உக்ரைன் கடந்த பிப். மாதம் இறுதியில் போரை ஆரம்பித்தது. அப்போது ஆரம்பித்த இந்த போர், 2 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், இன்னும் கூட முடிவுக்கு வரவில்லை.
ரஷ்யாவின் பாதுகாப்பு கருதியே இந்த ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின், அதை உறுதி செய்ததும் போரை நிறுத்துவோம் என்றும் கூறி இருந்தார்.

பொருளாதாரத் தடைகள்
இந்த போர் தொடங்கியது முதலே உலகின் கிட்டதட்ட அனைத்து நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல மேற்குலக நாடுகளும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. பல நாடுகளும் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து இருந்தது. இதனிடையே போர் தொடங்கிய பின்னர், ரஷ்யாவில் இருந்து எந்த நாடுகள் எவ்வளவு இறக்குமதி செய்துள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஷ்யாவுக்கு லாபம்
உக்ரைன் போர் தொடங்கிய பின்னர், இரண்டு மாதங்களில் மட்டும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் ரஷ்யா $66 பில்லியினை சம்பாதித்துள்ளது. கடுமையான பொருளாதாரத் தடைகள் இருந்த போதிலும், கச்சா எண்ணெய் விலை ஏற்றம் லாபத்தை உறுதி செய்ததாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம்
குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் 46 பில்லியன் டாலர் மதிப்புள்ள எரிபொருள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கி உள்ளது. இது ரஷ்யாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 71% ஆகும் கடந்த 2021ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் ரஷ்யாவிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் $12.3 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய்யை மட்டுமே இறக்குமதி செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி மிகப்பெரிய இறக்குமதியாளராக உள்ளது. $9.6 பில்லியன் மதிப்புள்ள கச்சா எண்ணெய்யை ஜெர்மனி இறக்குமதி செய்துள்ளது.

டாப் நாடுகள்
அதைத் தொடர்ந்து இத்தாலி, சீனா, நெதர்லாந்து, துருக்கி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் அதிகளவில் இறக்குமதி செய்துள்ளன. உக்ரைன் போருக்குப் பின்னர், ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இருந்த போதிலும், எரிசக்தி ஏற்றுமதி மூலம் ரஷ்யா அதிக லாபம் அடைந்ததால் ரஷ்யா பெரியளவில் தொடர்ந்து பயனடைகிறது என்பதையே இந்த ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது.

விலையேற்றம்
ரஷ்யாவில் இருந்து அனைத்து வகையான எரிசக்தி இறக்குமதிக்கும் அமெரிக்கா பிரிட்டன் நாடுகள் தடை விதித்துள்ளன. அதேநேரம் ரஷ்ய நிலக்கரி இறக்குமதிக்கு மட்டுமே ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. இதுபோன்ற தடைகள் சர்வதேச எரிசக்தி சந்தையில் எதிரொலிக்கிறது. விநியோகம் குறைந்துள்ளதால் ரஷ்யா எரிசக்தி பொருட்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன.

விலக முயலும் ஐரோப்பிய ஒன்றியம்
இதற்கிடையில், எரிபொருள் இறக்குமதியில் ரஷ்யா மீது நம்பி இருப்பதைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது. இருப்பினும், இப்போதுள்ள சூழலில் அதற்கு வாய்ப்பே இல்லை. ரஷ்ய இறக்குமதி, குறிப்பாக எரிவாயு இறக்குமதியில் ரஷ்யாவை நம்பியே இருக்க வேண்டி உள்ளது. அதேநேரம் கடந்த ஆண்டு உடன் ஒப்பிடுகையில் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயு 26% குறைந்துள்ளது. இது ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் தள்ளி நிற்க விரும்புவதையே காட்டுகிறது.

இந்தியாவை விட அமெரிக்கா அதிகம்
போர் தொடங்கி பின்னர் கடந்த 2 மாதங்களில் ரஷ்யாவிடம் இருந்து அதிகம் இறக்குமதி செய்த நாடுகள் பட்டியலில் ஜெர்மனி முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து இத்தாலி, சீனா, நெதர்லாந்து, துருக்கி பிரான்ஸ் ஆகிய நாடுகள் அடுத்தடுத்து இடங்களில் உள்ளது, இந்தியாவைப் பொருத்தவரை அது கடைசியாக 20ஆவது இடத்திலேயே உள்ளது. பெரும்பாலும் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் மற்றும் நிலக்கரியை மட்டுமே இந்தியா இறக்குமதி செய்கிறது. இதில் சுவாரஸ்சியம் என்னவென்றால், இந்தியாவைக் காட்டிலும் அமெரிக்கா அதிகளவில் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது என்பது தான்.












Click it and Unblock the Notifications