உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம்.. பதவியேற்பு எப்போது?
டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்னாவை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வரும் நவம்பர் 11 ஆம் தேதி சஞ்சீவ் கண்ணா பதவியேற்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டி ஒய் சந்திரசூட் பதவியேற்றுக்கொண்டார். தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்று வரும் அவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனால் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெயரை நீதிபதி டிஒய் சந்திரசூட் பரிந்துரைத்தார்.

இதனை அடுத்து தற்போதைய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்துள்ளது. இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து வரும் நவம்பர் 11 ஆம் தேதி சஞ்சீவ் கண்ணா, உச்ச நீதிமன்றத்தின் 51 வது தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார்.
புதிதாக தலைமை நீதிபதியாக பதவியேற்கும் சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 13 தேதியோடு நிறைவடையும். எந்த ஒரு நீதிமன்றத்திலும் சஞ்சீவ் கண்ணா தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தது. 51 வது நீதிபதியாக பதவியேற்க இருக்கும் சஞ்சீவ் கண்ணா கிட்டத்தட்ட 6 மாதங்கள் தலைமை நீதிபதி பொறுப்பை வகிப்பார்.
சஞ்சீவ் கண்ணா கடந்த 1960 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இவரது தந்தை டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக 1985 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர். இவரது தாயார் சரோஜ் கண்ணா. இவர் இந்தி பேராசிரியராக டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் பணியாற்றினார்.
கடந்த 1983 ஆம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கண்ணா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். வருமான வரித்துறையின் மூத்த வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றினார். கடந்த 2004 ஆம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராகவும் (சிவில்) நியமிக்கப்பட்டார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் பல்வேறு கிரிமினல் வழக்குகளிலும் அவர் ஆஜராகியிருக்கிறார்.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2005 ஆம் ஆண்டு சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். எந்த ஒரு நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்காமல், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார் சஞ்சீவ் கண்ணா. இதற்கு முன்பாக ஒரு சில நீதிபதிகளே இப்படி பொறுப்பை வகித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications