மத்திய விஸ்டா திட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி.. வழக்கு போட்டவரையும் விளாசிய உச்ச நீதிமன்றம்
டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடம், மத்திய அரசு அலுவலகங்கள் அடங்கிய மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனு தாக்கல் செய்தவர்களிடம் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது,
மத்திய விஸ்டா திட்டத்தை பற்றி மட்டுமே ஏன் கவனம் செலுத்துகிறீர்கள்? டெல்லியின் வேறு எந்த பொதுத் திட்டமும் செயல்படவே இல்லையா? டெல்லி உயர் நீதிமன்றம் விதித்த ரூ.1 லட்சம் தான் உங்கள் பிரச்சினையென்றால் அந்த அபராதம் எங்களைப் பொறுத்தவரை குறைவு தான் என்று நீதிபதிகள் கூறினர்.
முன்னதாக மத்திய விஸ்டா திட்டத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், ''மத்திய விஸ்டா திட்டம் தொடர்ந்து நடப்பதில் எந்தவிதமான தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி கொடுத்திருக்கிறது. ஆனால், இந்த மனு பொதுநல நோக்கோடு இல்லை. உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

மக்கள் ஆர்வம்
இந்தக் கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கலாம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது இந்த மத்திய விஸ்டா திட்டம். . நாடாளுமன்றம் முழுமையாக இங்கு நடக்க வேண்டும். பொதுமக்கள் இந்தத் திட்டத்தின் மீது மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள்.

ஒரு லட்சம் அபராதம்
இந்தக் கட்டிடப் பணிகளில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன்தான் செயல்படுகிறார்கள். பணியாளர்கள் தங்கியிருக்கும் பகுதிகளிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆதலால், இந்தத் திட்டத்தை நிறுத்தக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். மனுதாரரின் மனுவில் உண்மைத்தன்மை இல்லாததால் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கிறோம்'' என்று தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருந்தனர்

நீதிபதிகள் கேள்வி
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர், தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதாரர்கள் ஆன்யா மல்ஹோத்ரா, சோஹைல் ஹாஷ்மி ஆகியோர் ஏன் குறிவைத்து செயல்படுகிறார்கள் என்று கேள்வி எழுப்பினர்.

அபாரதம் குறைவு
மத்திய விஸ்டா திட்டத்தை பற்றி மட்டுமே கவனம் செலுத்துவது ஏன் என்றும் டெல்லியின் வேறு எந்த பொதுத் திட்டமும் செயல்படவே இல்லையா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் டெல்லி உயர் நீதிமன்றம் விதித்த ரூ.1 லட்சம் தான் உங்கள் பிரச்சினையென்றால் அந்த அபராதம் எங்களைப் பொறுத்தவரை குறைவு தான் என்று கூறியதுடன், மத்திய விஸ்டா திட்டத்தில் டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது என்று கூறி மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications