கேம் சேஞ்சர்.. ரஷ்யாவின் சிங்கிள் டோஸ் ஸ்புட்னிக் லைட் வேக்சின்.. தடுப்பாற்றல் எவ்வளவு? முழு விவரம்
டெல்லி: ரஷ்யா தனது சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் 78.6 முதல் 83.7% வரை தடுப்பாற்றலை அளிப்பதாகச் சோதனைகளில் தெரியவந்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா தாக்கம் தற்போதுதான் மெல்லக் குறைந்து வருகிறது. கொரோனா வைரசின் அடுத்த அலை வருவதைத் தடுக்க உலக நாடுகள் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதில் முக்கியமானது கொரோனா தடுப்பூசி பணிகள். இப்போது அனைத்து நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கொரோனா தடுப்பூசி
இருப்பினும், சர்வதேச அளவில் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு கொரோனா தடுப்பூசி உற்பத்தி இல்லை. இதனால் பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக, பெரும்பாலான தடுப்பூசிகளைக் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் 2 டோஸ்களாக மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இதனால் அதிக காலம் ஆகிறது. மேலும், மருத்துவ கழிவுகளும் அதிகம் உற்பத்தி ஆகிறது.

சிங்கிள் டோஸ் தடுப்பூசி
இந்தச் சூழ்நிலையில் சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆய்வுகள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் சிங்கள் டோஸ் கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசி குறித்த சில தகவல் வெளியாகியுள்ளது. ஸ்புட்னிக் லைட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசி 79-83.7% வரை பலனளிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் லைட்
ரஷ்யாவின் முதல் தடுப்பூசி ஸ்புட்னிக் வி. இது 21 நாட்கள் இடைவெளியில் 2 டோஸ்களை அளிக்கப்பட வேண்டும். முதல் டோஸில் Ad26 என்ற செயலிழக்கப்பட்ட வைரஸ், கொரோனாவின் புரோத ஸ்பைக்கை கொண்டிருக்கும். அதன் பிறகு 21 நாட்களில் அளிக்கப்படும் 2ஆவது டோஸில் AD5 என்ற செயலிழக்கப்பட்ட வைரஸ் இருக்கும். அதேபோல ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி, Ad26 என்ற செயலிழக்கப்பட்ட வைரசைக் கொண்டிருக்கும். இதிலும் கொரோனாவின் புரோத ஸ்பைக் இருக்கும்.

தடுப்பாற்றல் எவ்வளவு
இவை நமது உடலுக்கு கொரோன வைரசில் இருந்து எப்படித் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லித் தரும். ஸ்புட்னிக் வி தடுப்பூசி 91% வரை பலனளிக்கும் நிலையில், ஸ்புட்னிக் லைட் 79% பலனளிக்கிறது. கொரோனா மரணங்களை இவை 100% தடுக்கிறது. அதேநேரம், இவை தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு எதிராகக் குறைவாகவே பலன் அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை என்ன
சிங்கிள் டோஸ் கொரோனா லைட் தடுப்பூசி அதிகபட்சமாக 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் ஒரே தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு உள்ளதால், ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளித்த அனைத்து நாடுகளிலும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications