விதிகளை தூக்கி சாப்பிடும் பெரு நிறுவனங்கள்.. பெண்களுக்கான முக்கியத்துவம் எங்கே? சு.வெங்கடேசன் கேள்வி
டெல்லி: ரூ.100 கோடி முதலீடு அல்லது ரூ.300 கோடிக்கும் அதிகமான விற்பனை கொண்ட நிறுவனங்கள், இயக்குநர் அவையில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிற விதி இருக்கிறது. இந்த விதியின் கீழ் எத்தனை இந்திய நிறுவனங்கள் செயல்படுகின்றன? என்கிற கேள்வியை சு.வெங்கடேசன் எம்பி நாடாளுமன்றத்தில் எழுப்பியிருந்தார். இதற்கு நிதியமைச்சர் கொடுத்துள்ள பதில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
இது குறித்து சு.வெங்கடேசன் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், "2013 கம்பெனிகள் சட்ட பிரிவு 149வின்படி, ரூ.100 கோடி செலுத்தப்பட்ட மூலதனம் அல்லது ரூ.300 கோடி குறைந்தபட்ச விற்பனை உள்ள கம்பெனிகள் தங்கள் இயக்குநர் அவையில் ஒரு பெண் இயக்குநரையாவது கொண்டிருக்க வேண்டும். பாலின சமத்துவ நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட இந்த அம்சம் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது? என்று அறிய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தேன்.

இதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்திருந்தார். இவர் கொடுத்த விளக்கத்தில் எந்த அளவுக்கு நூற்றுக் கணக்கான கம்பெனிகள், பாலின சமத்துவ பார்வை இன்றி பெண் இயக்குநர் சம்பந்தமான விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளன என்பது வெளி வந்துள்ளது.
அதாவது, கடந்த 2016-2024 காலத்தில் 81 நிறுவனங்கள் பாலின சமத்துவ சட்டத்தை அமல்படுத்தாமல் விதி மீறலில் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் மீது அபராத தொகையாக ரூ.1.41 கோடி விதிக்கப்பட்டுள்ளது. 2018லிருந்து 'செபி' அமைப்பு விதிகளின்படி டெல்லி, மும்பை பங்குச் சந்தைகள் விதித்துள்ள தண்டனைத்தொகை விவரங்களை சேர்த்தால், 2019-2024 காலத்தில் 432 கம்பெனிகள் மீது ரூ.25 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த பதில் எந்த அளவுக்கு நூற்றுக்கணக்கான கம்பெனிகள் சட்ட மீறல்களில் ஈடுபடுகிறது, ஒரு பெண் இயக்குநர் கூட இல்லாமல் கம்பெனிகளை நடத்துகிறார்கள், பாலின சமத்துவம் குறித்த அக்கறை இன்றி செயல்படுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்துகிறது. நூற்றுக்கணக்கான கம்பெனிகள் இப்படி சட்டம் வந்து 10 ஆண்டுகள் ஆகியும், செபி விதிமுறைகள் வந்து 6 ஆண்டுகள் ஆகியும் மீறல்களை தொடர்வதற்கு காரணங்கள் ஆராயப்பட வேண்டும்.
இதற்கு காரணம் அபராதத்தொகை மிகக் குறைவாக இருப்பதுதான். இந்த பெரும் நிறுவனங்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராத தொகையை கட்டி விட்டு தப்பித்துக் கொள்வது எளிதாக உள்ளது. ரூ.100 கோடி மூலதனம் அல்லது ரூ.300 கோடிக்கு விற்பனை செய்யும் கம்பெனிகளுக்கு இந்த தொகை ஒன்றும் பெரியதல்ல.
இரண்டாவது காரணம், இயக்குநர் நியமனங்களில் அரங்கேறும் மீறல்கள் கிரிமினல் குற்றமாக கருதப்படாது என்று 2020ல் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம்தான். இது பெண்களை இயக்குநராக நியமிக்காமல் தவிர்க்கும் துணிச்சலை நிறுவனங்களுக்கு கொடுத்திருக்கலாம். ஆகவே அரசியல் உறுதியோடு கம்பெனிகள் மீதான கடும் நடவடிக்கை எடுக்கிற மாற்றங்களை அரசு கொண்டு வர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications