"பிறழ் சாட்சிகள்! விசாரணையில் தேக்கம்.." உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் பரபர
சென்னை: செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை வந்தது. அப்போது விசாரணையில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சொன்ன மனுதாரர் தரப்பு, இந்தக் கால தாமதம் காரணமாகப் பல சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
திமுகவின் மேற்கு மண்டலத்தில் முக்கிய முகமாக இருப்பவர் செந்தில் பாலாஜி. தமிழ்நாடு அமைச்சரவையில் மின்சாரத் துறை மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, முன்பு அதிமுகவில் இருந்தவர். குறிப்பாக ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.

செந்தில் பாலாஜி
அப்போது போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாகச் சொல்லி, பணமோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை தனித்தனியாக விசாரித்து வருகின்றன. இது குறித்து 2023ல் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், பின்னர் அவர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். சுமார் 15 மாதங்கள் அவர் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இருப்பினும், அமலாக்கத் துறை விசாரணையில் பெரியளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. இதன் காரணமாக நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வந்த மறுநாளே அவர் அமைச்சராகப் பதவியேற்றார். இருப்பினும், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிலர் மனு தாக்கல் செய்தனர். அப்போது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜி அமைச்சராகப் பதவியேற்றது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது.
உச்ச நீதிமன்றம்
உடனே அமைச்சராகப் பொறுப்பேற்றால்.. வழக்கு எப்படி நேர்மையாக நடக்கும்? அச்சமின்றி யார் சாட்சி சொல்ல வருவர் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர்ந்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என எச்சரித்தது. இதையடுத்து செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இப்போது செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் ஒன்றாக இணைத்து விசாரணை நடந்து வருகிறது. இதுபோல ஒன்றாக இணைத்து விசாரிப்பதற்கு எதிராக பாலாஜி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.. அந்த மனு நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சில முக்கிய வாதங்களை முன்வைத்தார்.
கோரிக்கை
அரசு சிறப்பு வழக்கறிஞரை மாற்ற வேண்டும் என்று மனுதாரர் தரப்பு கோரிக்கை வைத்தது. புதிய வழக்கறிஞர் பெயர்களைப் பரிந்துரைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது என்பதைக் குறிப்பிட்ட மனுதாரர் தரப்பு, மனுதாரர் என்ற முறையில் தாங்களும் சில பெயர்களைக் கொண்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.
தேக்கம்
மேலும், விசாரணையைத் தாமதிக்க வேண்டும் என்பதற்காகவே தேவையின்றி 2000+ சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்கள் ஒவ்வொருவரையும் விசாரித்தால் வழக்கு எப்போது முடியும் என்றே தெரியாது என்றனர். மேலும், இந்த வழக்கு விசாரணையில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த வழக்கறிஞர், இதனால் பல சாட்சிகள், பிறழ் சாட்சிகளாக மாறி வருவதாகவும் குறிப்பிட்டனர்
குற்றத்துக்கு உடந்தையாக இருந்தவர்களை முதலில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் அப்போது தான், வழக்கில் விரைந்து ஒரு தீர்வு ஏற்படும் என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது..












Click it and Unblock the Notifications