ஹிஜாப் அணிந்து தெருவில் நடக்கலாமே.. மார்க்கெட் போகலாமே.. மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் பேட்டி
டெல்லி: ‛‛நாட்டில் ஹிஜாப் தடை எங்குள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி தவறாக பிரசாரம் செய்கிறது'' என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி விமர்சனம் செய்தார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்ட பியூ கல்லூரிகளில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் துவங்கியது. ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடந்தன. ஹிஜாப்புக்கு போட்டியாக சிலர் காவிஷால் அணிந்து கல்லூரிகளுக்கு சென்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து சில கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும், கர்நாடக அரசும் பள்ளி, கல்லூரிகளில் சீருடை முறையை கட்டாயம் பின்பற்ற உத்தரவிட்டது. ஹிஜாப் தடையை எதிர்த்து உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

மதம் சார்ந்த ஆடைகள்
இந்த அமர்வு கடந்த வாரம், வழக்கு விசாரணை முடியும்வரை பள்ளி, கல்லூரிகளில் மதம்சார்ந்த ஆடைகளை அணியக்கூடாது என நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து வழக்கு தொடர்ந்து தினமும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

காங்கிரஸ், பாஜக வார்த்தை போர்
ஹிஜாப் பிரச்னை குறித்து அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர். காங்கிரஸ், பாஜகவையும், பாஜக, காங்கிரசையும் தொடர்ச்சியாக விமர்சித்து வார்த்தை போரில் ஈடுபடுகின்றன. இந்நிலையில் ஹிஜாப் பிரச்சனை தொடர்பாக காங்கிரஸ் கட்சியை மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த பிரச்சனையை பெரிதாக்கும் செயலில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

எரிபொருள் நிரப்பும் காங்கிரஸ்
இந்தியாவின் கலாசாரம், அரசியலமைப்பை ஹிஜாப் மூலம் வகுப்புவாத பிரச்னையாக தாக்குவது எந்த வகையான கலாசாரம் என தெரியவில்லை. ஹிஜாப் சர்ச்சையை தொடர்ந்து தூண்டும் வகையில் தவறான தகவல்களை பரப்பும் பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி துவக்கியுள்ளது. இந்த பிரச்னையை காங்கிரஸ் தூண்டி வருகிறது.

ஹிஜாப் தடை
இந்த நாட்டில் எங்கு ஹிஜாப் தடை உள்ளது என சொல்லுங்கள். தெருவில், மார்க்கெட், வீடு உள்பட அனைத்து இடங்களிலும் ஹிஜாப் அணிந்து நடமாடலாம். ஹிஜாப்பை முழுவதுமாக தடை செய்த நாடுகளை போன்றது அல்ல இந்தியா. உங்களுக்கு (காங்கிரஸ்) அரசியலமைப்பு உரிமைகள் இருந்தால் அரசியலமைப்பு கடமைகளும் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் இதுபோன்ற வகுப்புவாத பிரச்னைகளை தூண்டி நாடு பற்றி அவதூறு பரப்பி வெற்றி பெறலாம் என எண்ணுவது தவறான புரிதலாகும்'' என்றார்.












Click it and Unblock the Notifications