விடாது துரத்தும் நுபுர் சர்மா! அக்னிபாத் வேற! உச்சகட்ட டென்சனில் வடமாநிலங்கள்! அலர்ட் ஆகும் அரசு!
டெல்லி : நபிகள் நாயகம் குறித்து பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கருத்து தெரிவித்த விவகாரத்தில் பரபரப்பு அடங்குவதற்குள், அக்னிபாத் ராணுவ சேவை திட்டத்துக்கு எதிராக வடமாநிலங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளதால் இந்தியா முழுவதும் பாதுகாப்பினை அதிகப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி, பல்வேறு மாநிலங்களில், கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு, மசூதிகளின் வாயில்களில் கூடிய இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இதில் ஜார்கண்ட், உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் வன்முறை வெடித்தது. இந்த நிலையில், இன்று தொழுகைக்காக மசூதிகளில் கூட உள்ள இஸ்லாமியர்கள், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால், நாடு முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அக்னிபாத் திட்டம்
இதனையடுத்து உபி, பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் கலவரம் ஏற்படக்கூடும் என்ற சந்தேகம் உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையிl ராணுவம், கடற்படை, விமானப் படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் 'அக்னி பாதை' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. 4 ஆண்டுகள் பணிக்கு பின்னர் 80 சதவீதம் பேர் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவர் என்றும் மேலும் 20 சதவீதம் பேர் மட்டுமே ராணுவப் பணியை தொடர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் போராட்டம்
நாட்டின் பாதுகாப்பு படைகளின் செலவின குறைப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பீகார், உத்திரபிரதேசத்தில் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள், மத்திய அரசின் திட்டத்துக்கு எதிராக நேற்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்களுக்கு தீ
போராட்டத்தின் ஒரு பகுதியாக பீகாரில் சமஸ்திபூரில் பயணிகள் ரயிலின் 2 பெட்டிகளுக்கு இளைஞர்கள் தீ வைத்தனர். இந்த நிலையில் பீகாரில் இன்று காலை மீண்டும் பயணிகள் ரயிலுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்துள்ளனர். உத்திர பிரதேசத்தின், பல்லியா ரயில் நிலையத்தில் கூட்டமாக நுழைந்த போராட்டகாரர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்களை அடித்து நெருக்கி சேதப்படுத்தியதுடன் ரயில் நிலையத்தையும் நாசப்படுத்தினர்.

வீடுகள் மீது தாக்குதல்
இதன் காரணமாக இன்றும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது குறிப்பாக பாஜக பிரமுகர்களின் வீடுகளை குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீசார் தடியடி நடத்தி உள்ள நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது இந்நிலையில் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ரேணு தேவியின் வீட்டை இளைஞர்கள் தாக்கினர் .

மத்திய அரசு உத்தரவு
மேலும் பாஜக மாநில தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் வீடும் தாக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் விவகாரம் பெரிதாகி வரும் நிலையில் தமிழகத்திலும் இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது இதன் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நுபர் சர்மா விவகாரத்தில் பெரும் கலவரம் ]தற்போதுதான் லேசாக குறையத் தொடங்கிய நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட கிளம்பியுள்ளது மத்திய அரசுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications