நல்லாட்சி குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம்.. அமித் ஷா வெளியிட்ட அறிக்கையில் தகவல்
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நல்லாட்சி தினத்தையொட்டு வெளியிட்ட 2021ஆம் ஆண்டுக்கான நல்லாட்சி குறியீடு அறிக்கையில், நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் மத்திய் அரசின் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை சார்பில் நாட்டின் மாநிலங்களில் நல்லாட்சி குறியீடு எனும் மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம்,. இந்நிலையில் நடப்பாண்டு நிறைவடைய உள்ள நிலையில் நல்லாட்சிக் குறியீட்டை தலைநகர் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சனிக்கிழமை அன்று வெளியிட்டார்.
விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், வணிகம் & தொழில்கள், மனித வள மேம்பாடு, பொது சுகாதாரம், பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், பொருளாதார நிர்வாகம், சமூக நலன் & மேம்பாடு, நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் குடிமக்களை மையப்படுத்திய ஆளுகை ஆகிய பத்து துறைகளில் மாநிலங்களின் செயல்பாடுகளை குறித்து ஆய்வு நடத்தி இந்த அறிக்கை வெளியிடப்படும்

தமிழகம் முதலிடம்
இந்தாண்டு வெளியிடப்பட்டுள்ள நல்லாட்சி குறியீடு பட்டியலில் நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவில் ஏ குழுவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற மாநிலங்கள்
விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தையும், வணிகம் மற்றும் தொழில்கள் துறையில் தெலங்கானா மாநிலமும், மனித வள மேம்பாடு துறையில் பஞ்சாப் மாநிலமும் , பொது சுகாதாரத்தில் கேரளாவும், பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள் துறையில் கோவாவும், பொருளாதார நிர்வாகத்தில் குஜராத்தும், முதலிடத்தை பெற்றுள்ளன. இதேபோல சமூக நலன் மேம்பாட்டில் தெலங்கானாவும், சுற்றுச்சூழல் - கேரளாவும், குடிமக்களை மையப்படுத்திய ஆளுகை ஹரியானா மாநிலமும் முதலிடம் பெற்றுள்ளது.

அமித்ஷா பேச்சு
நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த 7 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி அரசு வழங்கிவரும் நல்லாட்சிக்காக மக்கள் நீண்ட காலமாகக் காத்திருந்தனர் எனவும், பிரதமர் மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சியின் பலன்களை மக்கள் பெறத் தொடங்கியதால், 2014 முதல் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றார். மேலும் கடந்த 7 ஆண்டுகளில் மோடி அரசின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை எனவும், ஏனெனில் அது தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.

நல்லாட்சி குறியீடு
மத்தியப் பணியாளர், ஒய்வூதியர் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நிகழ்சியில் கலந்து கொண்டு பேசும்போது, குடிமக்களை மையப்படுத்தியே பிரதமர் மோடி அரசின் ஆட்சி உள்ளது எனவும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆட்சியின் நிலையை மதிப்பிடுவதற்கு நல்லாட்சி குறியீடு உதவும் என்று பேசினார்.












Click it and Unblock the Notifications