3 நாட்கள் முன்.. நூலிழையில் உயிர் தப்பித்த டேனிஷ்.. ஆப்கானில் கொல்லப்பட்டது எப்படி? - பின்னணி
டெல்லி: ராய்டர்ஸ் நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளரும் புலிட்சர் பரிசு வென்றவருமான டேனிஷ் சித்திக் இன்று ஆப்கானில் கொல்லப்பட்டார். தாலிபான்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இவர் கொல்லப்பட்டார்.
Recommended Video
இந்தியாவை உலுக்கிய தேசிய அளவிலான பிரச்சனைகளை எடுத்துக்கொண்டால் அதில் அனைத்திலும் டேனிஷ் சித்திக்கின் புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கும். கடந்த 5- 7 வருடங்களில் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், சமுதாய பிரச்சனைகள், அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும் டேனிஷ் சித்திக் தனது புகைப்படங்கள் மூலம் உலகம் முழுக்க கொண்டு சென்றார்.
சர்வதேச அளவில் மதிக்கப்படும் இந்திய புகைப்படக்காரராக மும்பையை சேர்ந்த டேனிஷ் சித்திக் இடம்பெற்று இருந்தார். இந்த நிலையில்தான் இவர் இன்று ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் கொல்லப்பட்டார்.

புகைப்படம்
டெல்லியில் விவசாய போராட்டத்தின் வீரியத்தை ஒரே போட்டோவில் வெளிக்காட்டியது. வெளிமாநில தொழிலாளர்கள் கொரோனா லாக்டவுன் சமயத்தில் நடந்தே சொந்த ஊருக்கு சென்றதை புகைப்படம் எடுத்தது. டெல்லி கலவரத்தில் போலீஸ் அட்டூழியங்களை புகைப்படமாக வெளியிட்டது. சிஏஏ போராட்டங்களை படம்பிடித்து உலக நாடுகளுக்கு கொண்டு சென்றது, கொரோனா பரவலால் ஏற்பட்ட வடஇந்திய மரணங்களை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்றது என்று டேனிஷ் சித்திக்கின் புகைப்படங்கள் இந்திய பிரச்சனைகளின் சர்வதேச அடையாளமாக திகழ்ந்தது.

வைரல்
இவரின் புகைப்படத்தை பார்த்துதான் சர்வதேச நாடுகள் பல இந்தியாவில் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும், கொரோனா பரவல் குறித்தும் பேச தொடங்கின. இதன் விளைவாகவே இவர் சர்வதேச அளவிலும் கவனிக்கப்பட்டார். இவர் ரோஹிங்கியா முஸ்லீம்களின் அவலத்தை புகைப்படம் எடுத்து உலகிற்கு தெரியப்படுத்தினார். இதன் விளைவாக இவருக்கு புலிட்சர் பரிசும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக முன்னேறி வரும் நிலையில் அங்கு செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்தார்.

செய்தி
கடந்த சில வாரமாக அங்கு தீவிரமாக செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டவர், ஆப்கானிஸ்தான் படைகளுடன் இணைந்து தினமும் அங்கு நடக்கும் போர் நிலவரங்களை புகைப்படங்களாகவும், கட்டுரைகளாகவும் வெளியிட்டு வந்தார். இவர் 3 நாட்களுக்கு முன் தாலிபான் தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பித்தார். ஆப்கானிஸ்தானில் தற்போது கந்தகாரில் தாலிபான் படைகளுக்கும் ராணுவத்திற்கும் இடையில் மோதல் நடந்து வருகிறது.

மோதல்
இந்த கந்தகார் மோதல் குறித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ராய்டர்ஸ் செய்தி ஊடகத்தில் டேனிஷ் எழுதிய கட்டுரையில், நான் ஆப்கான் படைகளுடன் அங்கு நடக்கும் போர் குறித்து செய்தி சேகரித்து வருகிறேன். ஆப்கான் படைகள் அந்நாட்டில் போர் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் கடுமையான மீட்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஒரு பக்கம் தாலிபான்களை எதிர்க்கும் படைகள் இன்னொரு பக்கம் மக்களையும் மீட்டு வருகிறது.

இளைஞர்கள்
பல இளைஞர்கள் ஆப்கான் படையில் இருக்கிறார்கள். இரவு முழுக்க தாலிபான் படைகளை எதிர்க்கும் இவர்கள் பகலில் தூங்காமல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுடன் நானும் செய்தி சேகரிக்க பயணப்பட்டேன். கந்தகாரில் உள்ள பகுதி ஒன்றில் தாலிபான் படைகளிடம் சிக்கி இருந்த போலீசாரை மீட்பதே ஆப்கான் படையின் அன்றைய ஆப்ரேஷன். அங்கு தாலிபான்களுக்கும், ராணுவத்திற்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது.

மோதல்
நான் ராணுவ வாகனத்தில் செல்லும்போதே அங்கு நிலவும் பதற்றத்தை என்னால் உணர முடிந்தது. தாலிபான்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்குவார்கள் என்ற நிலை இருந்தது. எங்களின் மீட்பு வாகனம் ஒன்று மீட்பு பகுதிக்கு சென்ற போது அங்கே மோதல் வெடித்தது. நாங்கள் எதிர்பார்க்காத இடங்களில் இருந்தெல்லாம் தாக்குதல் நடத்தினார்கள்.

3 வாகனம்
எங்களுக்கு முன் சென்ற 3 ராணுவ வாகனங்கள் தாலிபான் தாக்குதலில் வீழ்த்தப்பட்டது. நான் சென்ற வாகனம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எனக்கு எதுவும் ஆகவில்லை. அதன்பின் தொடர் தாக்குதல்கள் மூலம் அந்த போலீசாரை ஆப்கான் ராணுவம் வெற்றிகரமாக மீட்டு, அங்கிருந்து திரும்பி வந்தது. நாங்கள் திரும்பி வரும் வரை தாலிபான்களின் தாக்குதல் நிற்கவில்லை என்று டேனிஷ் தனது கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார்.

3 நாட்கள்
3 நாட்களுக்கு முன் கந்தகாரில் நடந்த இந்த மீட்பு பணியில் டேனிஷ் கலந்து கொண்டு செய்தி சேகரித்தார். அதில் நூலிழையில் உயிர் பிழைத்தவர் இன்று அதே மாவட்டத்தில் ஸ்பின் போட்லாக் என்ற பகுதியில் கொல்லப்பட்டுள்ளார். ஸ்பின் போட்லாக் பகுதியில் ராணுவத்தோடு சேர்ந்து செய்தி சேகரித்த போது டேனிஷ் சென்ற கான்வாய் மீது தாலிபான் படைகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளது.

டேனிஷ்
அதில் டேனிஷ் சென்ற வாகனம் மீது வீசப்பட்ட குண்டு காரணமாக வாகனம் தரைபுரண்டதில் டேனிஷ் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது. உலகம் முழுக்க பல செய்தியாளர்கள் மத்தியில் பெரிய அளவில் மதிக்கப்பட்ட டேனிஷ் ஆப்கானில் கொல்லப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா பரவல் குறித்து இவர் எடுத்த புகைப்படங்களை சர்வதேச ஊடகங்கள் பாராட்டி இருந்தன.

ஹீரோ
ஹீரோ போல இவர் புகைப்படம் எடுத்துள்ளார் என்று பலரும் பாராட்டி இருந்தனர். இதற்கு அப்போது பதில் அளித்திருந்த சித்திக் டேனிஷ் உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி, நான் செய்யும் பணியில் ஹீரோயிசம் என்று எதுவும் இல்லை. ஒரு செய்தியாளராக, இதைத்தான் நான் செய்ய வேண்டும். நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உலகிற்கு தெரியப்படுத்துவதே என்னுடைய பணி என்று குறிப்பிட்டு இருந்தார்.. இந்த நிலையில் இன்று இவரின் மரணத்தை தொடர்ந்து உலகம் முழுக்க உள்ள செய்தியாளர்கள் டேனிஷ் சித்திக்கை ஹீரோவாக கொண்டாடி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
