பிரதமர் மோடியின் ட்விட்டர் மீட்கப்பட்டது எப்படி? நடந்தது என்ன?– ட்விட்டர் இந்தியா விளக்கம்
டெல்லி: பிரதமர் நரேந்திரமோடியின் ட்விட்டர் கணக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஹேக் செய்யப்பட்ட பின்னர், கணக்கைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு திடீரென ஹேக் செய்யப்பட்டது. அக்கவுண்டை ஹேக் செய்த ஹேக்கர்கள் கிரிப்டோகரன்சியை ஊக்குவிக்கும் வகையில் சில ட்விட்களை பகிர்ந்தனர்.
மத்திய அரசு இந்தியாவில் கிரிப்டோகரன்சி விவகாரத்தில் எதிர்ப்பு மனநிலையில் உள்ள நிலையில் நாடாளுமன்றத்திலும் சில கருத்துருவாக்கங்களை கொண்டு வந்தது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் அக்கவுண்டில் கிரிப்டோகரன்சிக்கு ஆதரவான கருத்துகள் இருந்தது அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

ட்விட்டர் கணக்கு மீட்பு
இதனையடுத்து தகவல் கிடைத்தவுடன் ட்விட்டர் மற்றும் பிரதமர் அலுவலக தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலமாக கணக்கு உடனடியாக மீட்கப்பட்டது. இதனையடுத்து பிட்காய்ன் குறித்த பதிவும் உடனடியாக அகற்றப்பட்டது. மேலும் அந்த ட்விட்டை யாரும் பகிர வேண்டாம் என ட்விட்டர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

பிட்காயின் சட்டப்பூர்வம் என ட்விட்
பிரதமர் மோடியின் கணக்கை மீட்டெடுப்பதற்கு முன், பிரதமர் மோடியின் டைம்லைனில் URL உடன் ஒரு ட்வீட் பகிரப்பட்டது. அதில், "இந்தியா அதிகாரப்பூர்வமாக பிட்காயினை சட்டப்பூர்வ டெண்டராக ஏற்றுக்கொண்டது. அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக 500 பி.டி.சி.யை வாங்கி, நாட்டின் அனைத்து மக்களுக்கும் விநியோகித்து வருகிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அந்த ட்வீட் நீக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனம் விளக்கம்
இந்த சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, பிரதமர் அலுவலகத்துடன் எங்களிடம் 24x7 திறந்த தொடர்பு உள்ளது எனவும், பிரதமர் மோடியின் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது குறித்து எங்களுக்குத் தெரிந்தவுடன் கணக்கைப் பாதுகாக்க எங்கள் குழு தேவையான நடவடிக்கைகளை எடுத்தது என்றும், இந்த நேரத்தில் வேறு பாதிப்புக்குள்ளான கணக்குகளுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது எனக் கூறினார்.

கணக்கை குறிவைத்து தாக்குதல்
ட்விட்டரின் நிறுவனத்தின் ஆரம்ப விசாரணையில் கிடைத்துள்ள ஆதாரங்களின்படி,பிரதமர் மோடியின் கணக்கு ட்விட்டரின் உள் அமைப்புகளில் ஏதேனும் மீறல் காரணமாக ஹேக் செய்யப்படவில்லை என்றும்,ஒருங்கிணைந்த சமூக பொறியியல் தாக்குதல்களைப் பயன்படுத்தி கடந்த ஆண்டு உலகத் தலைவர்களின் கணக்குகளை ஹேக் செய்ததை போல் இந்த முறை பிரதமரின் கணக்கு ஹேக் செய்யப்படவில்லை என்றும், இது ஒரு குறிப்பிட்ட கணக்கை மட்டும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஹேக்கர்களை கண்டறிய முயற்சி
இதற்கிடையில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவும் பிரதமரின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக்கிங் சம்பவத்தின் மூலத்தை கண்டறிய முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்குப் பிறகு, பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம் போல் ட்வீட் செய்தார். தனித்தனி ட்வீட்களில், அவர் சரத் பவாரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார் மற்றும் நண்பகல் நேரத்தில் "டிபாசிட்டர்கள் முதல்: உத்தரவாத காலக்கெடு டெபாசிட் இன்சூரன்ஸ் பேமெண்ட் ரூ. 5 லட்சம்" திட்டத்தில் பங்கேற்பதாகக் கூறினார்.












Click it and Unblock the Notifications