தேர்தல் பத்திரம் டூ விநாயகர் சதுர்த்தி! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று விடைபெறுகிறார்
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பதவி வகித்து வந்த நிலையில், இன்றுடன் அவரது பணிநாட்கள் முடிவடைகிறது. இந்நிலையில் அவர் தலைமை நீதிபதியாக இருந்த போது வழங்கிய தீர்ப்புகள் குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்திய நீதித்துறை வரலாற்றில் தந்தை-மகன் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை சந்திரசூட் முறியடித்துள்ளார். அவரது தந்தை சந்திரசூட் சீனியர், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்திருக்கிறார். அவரது காலத்தில் 'கேசவானந்த பாரதி' , 'மினர்வா மில்ஸ்' மற்றும் 'ஏடிஎம் ஜபல்பூர்' என பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக வந்த சந்திரசூட் ஜூனியர், தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை அங்கீகரித்தல், ஓர் பாலின உறவை அங்கீகரித்தது, தேர்தல் பத்திரம் என பல முக்கிய வழக்குகளில் இவர் தீர்ப்பளித்திருக்கிறார்.

கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஆண்-பெண் திருமண உறவு குறித்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. அதன்படி ஆணோ, பெண்ணோ அவர்கள் யாரை தங்கள் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய முடியும். அரசோ, போலீசோ, ஏன் பெற்றோர்கள் கூட இந்த உரிமையில் தலையிட முடியாது என்று இந்த தீர்ப்பு தெளிவாக கூறியது. இதை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியது. அதில் டி.ஒய்.சந்திரசூட் இருந்தார். நீதித்துறையில் அவரது பங்களிப்பு அப்போதே தொடங்கிவிட்டது.
அதன் பின்னர் அதே ஆண்டில் மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கிய நீதிபதி அமர்வில் சந்திரசூட் இடம் பெற்றிருந்தார். அதாவது தன்பாலின சேர்க்கை சட்டப்படி குற்றம் என்று இந்திய தண்டனை சட்டத்தின் 377வது பிரிவு கூறியிருந்தது. இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இதில் சந்திரசூட் இடம்பெற்றிருந்தார். தீர்ப்பில், ஐபிசி சட்டப்பிரிவு 377 ரத்து செய்யப்பட்டது.
இதே ஆண்டில் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமயில் அமைக்கப்பட்ட அமர்வில் சந்திரசூட் இடம் பெற்றிருந்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்று இருந்த விதியை ரத்து செய்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது.
இதனை தொடர்ந்து, 2019ல் ராமர் கோயில் தீர்ப்பு, அர்ணாப் கோஸ்வாமி ஜாமீன் வழக்கிலும் சந்திரசூட் இடம்பெற்றிருந்தார். இதெல்லாம் வெறும் ட்ரைலர்தான், என்கிற ரீதியில் சந்திரசூட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் வழங்கிய தீர்ப்புகள் இருந்தன. குறிப்பாக தேர்தல் பத்திர வழக்கில் மத்திய அரசுக்கே இவர் ஷாக் கொடுத்தார். பாஜக தலைமையிலான மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திரம் என்பது சட்டவிரோதமானது என்று கூறி இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி எழுதினார்.
இதன் மூலம், தேர்தல் பத்திர நடமுறையை சரி என்று கூறி வந்த பல அரசியல் கட்சிகள் மக்கள் மத்தியில் அம்பலமாகின. அதேபோல, 2023ம் ஆண்டு மே மாதம் டெல்லி அரசு vs துணை நிலை ஆளுநர் வழக்கில் அவர் அளித்த தீர்ப்பு, மத்திய அரசுக்கு மேலும் ஷாக் கொடுத்தது.
அதாவது டெல்லியில் யாருடைய அதிகாரம் பெரிசு என்று போட்டி எழுந்தது. மத்திய அரசின் பிரதிநிதியாக உள்ள துணைநிலை ஆளுநரே அதிக அதிகரம் படைத்தவர் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிக அதிகாரம் என்றும் வாதிடப்பட்டது. சந்திரசூட் தலைமையில் 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து. இறுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வளவு சிறப்பு மிக்க தீர்ப்புகளை சந்திரசூட் வழங்கியிருந்தாலும், அவர் மீதும் சில சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக அவரது வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியபோது, பிரதமர் அங்கு சென்றிருந்தது நீதித்துறை-அரசு கூட்டோ? என்று கேள்வியை பல்வேறு தரப்பினரிடம் இருந்து எழுப்பியிருந்தது. இவ்வளவு பஞ்சாயத்திற்கு மத்தியில் இன்றுடன் சந்திரசூட் பணிநாட்கள் முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications