UGC விதிமுறைகளை தேர்தலுக்கு பயன்படுத்தும் பாஜக? உத்தரப் பிரதேச அரசியலில் திடீர் கொந்தளிப்பு!
டெல்லி: பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), சமீபத்தில் மாணவர்களுக்கு புதிய விதிமுறைகளை வகுத்திருந்தது. இதற்கு பொதுப்பிரிவினர் இடையே கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இது தொடர்பான வழக்கு ஒருபுறம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கையில், மறுபுறம் இந்த விதிமுறைகளை பாஜக அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
இன்று 'டெக்கான் ஹெரால்ட்' செய்தி ஊடகத்தில், 2027 உத்தரப் பிரதேச தேர்தலில், பாஜக எப்படி எதிர்க்கொள்ள இருக்கிறது? குறிப்பாக யுஜிசி விஷயத்தை தனது அரசியல் ஆதாயத்திற்காக எப்படி பயன்படுத்த இருக்கிறது என்பது குறித்து விவரிக்கப்பட்டிருக்கிறது.

யுஜிசி விதிகள் என்ன?
பல்கலைக்கழகங்களில் எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு எதிராக நடக்கும், ஒடுக்குமுறைகளை தடுக்கவே சமத்துவ வழிகாட்டுதல்களை யுஜிசி வெளியிட்டு பின்பற்றி வருகிறது. ஆனால், ரோகித் வெமுலா உள்ளிட்ட மாணவர்களின் மரணத்திற்கு பின்னர் இந்த விதிகளை திருத்த வேண்டிய நெருக்கடிக்கு யுஜிசி தள்ளப்பட்டது. இதனையடுத்து தற்போது புதிய சமத்துவ வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
மேல்தட்டு சாதி இளைஞர்கள்
அதன்படி, பல்கலைக்கழகங்களில் எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு எதிராக பாகுபாட்டை தடுக்க, சில விதிகள் புதியதாக கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே இருந்த விதிகளில் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கான பாதுகாப்பு குறித்து மட்டுமே பேசப்பட்டிருந்தது. ஆனால், இந்த புதிய விதிகளில் ஓபிசி பிரிவினரையும் சேர்த்து இருக்கிறது பாஜக. இதற்கு தான் மேல்தட்டு சாதி இளைஞர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
கடும் எதிர்ப்பு
ஏற்கனவே இருந்த விதிமுறைகளின் படி, யாராவது உள்நோக்கத்துடன் புகார் அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை இருந்தது. ஆனால், இந்த புதிய விதிமுறைகளில் இந்த தண்டனை பிரிவு நீக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மேல்தட்டு சாதி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் பொய் புகார்கள் அளிக்கப்படலாம் என்று அந்த பிரிவினர் அச்சமடைந்து இருக்கின்றனர்.
புதிய வரையறை
அதேபோல, புதிய விதிகளின்படி.. சாதி பாகுபாடு என்பது, எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு எதிராக நடப்பது மட்டுமே என்று வரையறுக்கப்பட்டு இருக்கிறது. மேல்தட்டு சாதி மாணவர்கள், அதாவது பொதுப் பிரிவு மாணவர்கள் ஏதேனும் பாடுபட்டை எதிர்கொண்டால், இந்த விதிகளின் கீழ் புகார் அளிக்க முடியாது. எனவே, தங்களை இரண்டாம் தர குடிமக்களாக இந்த புதிய விதிகள் மாற்றுவதாக மாணவர்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.
விசாரணை குழு
மட்டுமல்லாது, புகார்களை விசாரிக்க அமைக்கப்படும் குழுவில், எஸ்சி/எஸ்டி/ஓபிசி மற்றும் பெண்கள் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று விதி வகுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், பொது பிரிவினருக்கு அதில் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்படவில்லை. இதனால் விசாரணை நேர்மையாக இருக்காது என்று பொது பிரிவினர் அச்சம் தெரிவித்து இருக்கின்றனர். 2012ம் ஆண்டு விதிகளில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு மட்டுமே பாதுகாப்பு இருந்தது. தற்போது ஓபிசி பிரிவினரும் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
போராட்டம் வெடித்தது
இந்த காரணங்களுக்காக, யுஜிசி-யின் புதிய சமத்துவ வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போது, உத்திர பிரதேசம், பீகார், டெல்லி மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் உயர் சாதி இளைஞர்களிடையே போராட்டங்கள் வெடித்தன. இந்த எதிர்ப்புகளுக்கு பிறகு, தற்போது உச்சநீதிமன்றம் இந்த வழிகாட்டுதல்களை நிறுத்தி வைத்திருக்கிறது.
வழக்கமாக, பாஜகவை உயர் சாதி மக்களின் கட்சி இன்று பலரும் அடையாளப்படுத்துகின்றனர். இதனால் பாஜக உத்தரபிரதேசத்தில் கடுமையாக அடி வாங்கி இருக்கிறது.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்டோர் அதாவது ஓபிசி மற்றும் எஸ்சி/எஸ்டி வாக்குகள் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அதிக அளவில் சென்று இருக்கிறது. கடந்த 2019ல் உத்தரபிரதேசத்தில் பாஜக 66 இடங்களில் வென்றிருந்தது. ஆனால், 2024 வெறும் 33 இடங்களில் மட்டுமே ஜெயித்திருந்தது. எனவே இந்த வாக்கு வங்கியை மீண்டும் தங்கள் பக்கம் கொண்டு வர, யுஜிசி விதிகளை பயன்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அதாவது ஓபிசி பிரிவினருக்கான கட்சியாகவும் பாஜக தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த விதிகளுக்கு எதிராக, உத்தரப் பிரதேசத்தில் உயர் சாதி மாணவர்கள் பாஜகவுக்கு எதிராக கொந்தளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications