அரசுக்கு எதிரான வழக்கை நான் விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
டெல்லி: ‛‛அரசுக்கு, எதிரான வழக்கை எனது அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை என்று நினைக்கிறேன். விரைவில் நான் ஓய்வு பெறபோவதால் மத்திய அரசு இப்படியான செயலை எடுத்து இருக்கலாம். நீதிமன்றத்திடம் விளையாடும் வித்தை மற்றும் நிலைப்பாட்டை மத்திய அரசிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை'' என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் அதிருப்தி தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நம் நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் உள்ளார். இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். இதன்மூலம் தலித் சமுதாயத்தை சேர்ந்த 2வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்ற பெருமைக்கு சொந்தக்காரராக மாறினார் பிஆர் கவாய். பிஆர் கவாய் விரைவில் ஓய்வு பெற உள்ளார். வரும் நவ.,23ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது.

இந்நிலையில் தான், பல்வேறு தீர்ப்பாயங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் சேவைக்கான நிபந்தனைகளை (uniform Service Condidtions) ஒரே மாதிரியாக்கும் தீர்ப்பாய புனரமைப்பு சட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி பிஆர் கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மனுதாரர்கள் தரப்பு வாதங்களை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முன்வைத்து விட்டனர். இதையடுத்து மத்திய அரசு சார்பில் வாதங்கள் வைக்க வேண்டும். ஆனால் சர்வதேச தீர்ப்பாயத்தில் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அரசின் சார்பில் வாதாடும் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் இந்த வழக்கு விசாரணையை சில நாட்கள் ஒத்திவைத்தது. இதைடுத்து இந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அமர்வில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் அதற்கு முன்பாக மத்திய அரசு சார்பில் நள்ளிரவில் இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனால் தலைமை நீதிபதி பிஆர் கவாய் அதிருப்தியடைந்தார். இதுபற்றி தலைமை நீதிபதி பிஆர் கவாய், ‛‛நீதிமன்றத்திடம் விளையாடும் வித்தை மற்றும் நிலைப்பாட்டை மத்திய அரசிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு வழக்கில் மனுதாரர்களின் வாதங்கள் முடிந்த பிறகு மத்திய அரசு இத்தகைய கோரிக்கையை வைப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனை ஏற்க முடியாது. இந்த மனுவை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்.
அரசுக்கு, எதிரான வழக்கை எனது அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை என்று நினைக்கிறேன். விரைவில் நான் ஓய்வு பெறபோவதால் மத்திய அரசு இப்படியான செயலை எடுத்து இருக்கலாம். இதுபற்றி அட்டர்னி ஜெனரல் ஒருமுறை கூட எங்களிடம் கூறவில்லை'' என்று கூறினார்.
இதற்கு அட்டர்னி ஜெனரல், ‛‛ஒருபோதும் எங்களுக்கு அப்படியான நோக்கம் இல்லை. இந்த வழக்கில் சட்ட ரீதியான சில கேள்விகள் உள்ளதால் தான் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வை கேட்டோம். இதனால் அரசியலமைப்பின் பிரிவு 145(3) இன் படி வழக்கை ஐந்து நீதிபதிகளுக்குக் குறையாத அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும். நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை'' என்றார்.
இதை கேட்ட தலைமை நீதிபதி பிஆர் கவாய், ‛‛சட்ட ரீதியான கேள்விகள் அதிகம் இருப்பின் அதனை பெரிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தால் நாங்களே அந்த முடிவுக்கு வருவோம். வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவோம்'' என்று கூறினார். மேலும் இந்த வழக்கை நவம்பர் 7 ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications