உ.பி.க்கு போகும் ராகுல் காந்தியின் யாத்திரை.. அழைப்பை நிராகரிக்கும் அகிலேஷ் யாதவ், மாயாவதி?
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு செல்லும் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் யாத்திரையில் இணைய வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அகிலேஷ், மாயாவதி உள்ளிட்டோர் ராகுல் யாத்திரையில் இணைவார்களா? என்பது சந்தேகம் எனவும் கூறப்படுகிறது.
ராகுல் காந்தி தமது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான யாத்திரையை செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கினார். கன்னியாகுமரியில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார்.

100 நாட்களுக்கும் மேலாக சுமார் 2,000 கிலோ மீட்டர் தொலைவை கடந்து டெல்லியை ராகுல் யாத்திரை சென்றடைந்துள்ளது. தற்போது ஒருவாரம் ராகுல் யாத்திரைக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ராகுல் யாத்திரையில் திமுகவின் கனிமொழி எம்பி, மநீம தலைவர் கமல்ஹாசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து 2-ம் கட்ட யாத்திரை காஷ்மீர் நோக்கி செல்ல உள்ளது. டெல்லி, உபி, பஞ்சாப் வழியாக காஷ்மீர் செல்கிறது இந்த யாத்திரை.
ராகுலின் பாதயாத்திரை உத்தரப்பிரதேச மாநிலத்துக்குள் செல்லும் போது வந்து இணையுமாறு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி ஆகியோருக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் அகிலேஷ், மாயாவதி உள்ளிட்டோர் ராகுல் யாத்திரையில் இணையக் கூடிய சாத்தியங்கள் இல்லை என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications