'வீடு வீடாக சென்று தடுப்பூசி.. இதுதான் நமது அடுத்த இலக்கு'.. பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
டெல்லி: நாடு முழுவதும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டம் போட்டு வரும் கொரோனாவை தடுக்கும் பேராயுதம் தடுப்பூசியாகும். இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பிரதானமாக போடப்படுகின்றன.
தடுப்பூசி மீதான பயம் காரணமாக முதலில் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டிய மக்கள் தற்போது மிக ஆர்வமாக அதனை போட்டு வருகின்றனர். பல மாநிலங்கள் மெகா தடுப்பூசிகள் முகாம்கள் அமைத்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றன.

100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை
இதன் காரணமாக இந்தியா 100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்தது. தமிழகம், கேரள உள்ளிட்ட மாநிலங்கள் தடுப்பூசியை விரைவாக செலுத்தினாலும் வடகிழக்கு மாநிலங்கள் சில தடுப்பூசி வேகத்தில் மந்தமாக இருக்கின்றன. இந்த நிலையில் 50 சதவீதத்திற்கும் குறைவாக தடுப்பூசி செலுத்திய மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

வீடு வீடாக தடுப்பூசி
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-இதுவரை நீங்கள் அனைவரும் தடுப்பூசி மையங்களுக்கு மக்களை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறீர்கள். இப்போது வீடு வீடாக தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட வேண்டும், வீடு வீடாக தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். இதேபோல் இரண்டாவது டோஸில் சமமான கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும். தடுப்பூசி வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

நமது குறிக்கோள்
தடுப்பூசி விழிப்புணர்வுக்காக மதத் தலைவர்கள் மற்றும் என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் நாம் ஒரு நாளில் சுமார் 2.5 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம். இது நமது திறனைக் காட்டுகிறது. இப்போது 'ஒவ்வொரு வீட்டிற்கும் தடுப்பூசி, வீட்டுக்கு வீடு தடுப்பூசி' என்பதுதான் நமது குறிக்கோள். இந்த உணர்வோடு ஒவ்வொரு வீட்டையும் நாம் சென்றடைய வேண்டும்.

கிராமத்திலும் கவனம்
ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு நகரத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு கிராமத்திற்கும் வெவ்வேறு உத்திகளை உருவாக்க வேண்டும் என்றால், அதைச் செய்யுங்கள்.. 25 பேர் கொண்ட குழுக்களை அமைக்கலாம். NCC மற்றும் NSS உதவியையும் பெறலாம். மேலும் மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும். மக்கள் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்வதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications