வயநாடு வெள்ளத்தில் கை கொடுத்த கார்கள்.. டேக் செய்த நெட்டிசன்ஸ்.. ஆனந்த் மகிந்திரா கொடுத்த அட்வைஸ்
டெல்லி: வயநாடு நிலச்சரிவின் போது வெள்ளத்தில் சிக்கி வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்த மக்களை, மகிந்திரா நிறுவனத்தின் வாகனங்களான தார், ஜீப் போன்றவற்றில் சென்று மீட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்த வீடியோவை பகிர்ந்து ஆனந்த் மகிந்திராவுக்கு சில நெட்டிசன்கள் நன்றி தெரிவித்து இருந்த நிலையில் இதற்கு ஆனந்த் மகிந்திரா பதில் கூறியுள்ளார்.
கேரளாவில் உள்ள அழகிய மலை மாவட்டமான வயநாட்டில் கடந்த மாதம் 30 ஆம் தேதி கனமழையை தொடர்ந்து பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை கிராமங்களும் சின்னாபின்னமாகின.

வயநாடு நிலச்சரிவு: நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்ததால் வீடுகள், பாலங்கள், சாலைகள், வாகனங்கள் என அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் அடித்து செல்லப்பட்டன. மண்ணுக்குள் பலர் உயிரோடு புதைந்துவிட்ட நிலையில், ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 400 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். தொடர்ந்து 8-வது நாளாக மீட்பு பணி நடைபெறுகிறது.
மீட்பு பணிகள்: ராணுவத்தின் முப்படைகளை சேர்ந்த வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். கனமழையால் வயநாடு மாவட்டத்தில் பல இடங்களும் வெள்ளத்தில் மிதந்தன. வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்த மக்களை தன்னார்வலர்கள் பலரும் மீட்டனர். அந்த வகையில் தான், வெள்ளத்தில் சிக்கி வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்த மக்களை, மகிந்திரா நிறுவனத்தின் வாகனங்களான தார், ஜீப், போன்றவற்றில் சென்று மீட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
ஆனந்த் மகிந்திராவுக்கு நன்றி: இடுப்பளவுக்கு மேல், தண்ணீர் சூழ்ந்த பகுதிகளிலும் இந்த கார்கள் அசால்டாக சென்றன. இந்த காட்சிகளை தொகுத்து ஆனந்த் மகிந்திராவுக்கு நன்றி என பதிவிட்டு இருந்தனர். இந்தக் காட்சிகளை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருக்கும் ஆனந்த் மகிந்திரா, இதுபோன்ற செயல்களை செய்ய முயற்சிக்க வேண்டாம் என பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
ஆனந்த் மகிந்திரா பதில்: இந்த வாகனத்தின் ஸ்ணோர்கெல் இருந்தாலும் கூட இந்த அளவுக்கு உயிரை பணையம் வைக்க நான் யாரையும் பரிந்துரைக்க மாட்டேன். இதை ஒரு ஸ்டண்ட் ஆக செய்து பார்க்க யாரும் முயற்சிக்காதீர்கள். இந்த வீடியோவில் உள்ள மக்கள் தங்கள் உயிரையும் பணய வைத்து மற்றவர்களின் உயிரை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குதான் நான் நன்றியை சொல்ல வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
மகிந்திரா கார்: மகிந்திரா வாகனம் தண்ணீரில் பாதியளவுக்கு மேல் மூழ்கினாலும் எந்த சிக்கலும் இன்றி செல்வதை சுட்டிக்காட்டி, இத்தகைய ஒரு வாகனத்தை தயாரித்த மகேந்திரா நிறுவனத்தின் தலைவருக்கு நன்றி தெரிவிப்பதாக பொருள் படும் வகையில், அந்த வீடியோவில் கேப்ஷன்கள் இடம் பெற்று இருந்தன. இந்த நிலையில், தான் ஆனந்த் மகிந்திரா, எனக்கு நன்றி சொல்வதை விட மீட்கும் பணியில் ஈடுபட்டுவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்று பதிவிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications