ரோட்டுக்கு வந்த மம்தா பானர்ஜி! வாக்குச்சாவடி சூறை.. வன்முறை! மேற்கு வங்கத்தில் உச்சகட்ட பதற்றம்!
டெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பாஜகவினர் இடையே மோதல் வெடித்திருப்பதால், உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது. இங்கு அவரை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி களம் இறங்கியுள்ளார். கடந்த 2021 தேர்தலிலும் இதேபோன்று மோதல் வெடித்தது. அதன் இன்னொரு வெர்ஷனாக இந்த மோதல் பார்க்கப்படுகிறது.

தேர்தலில் மம்தா பானர்ஜி ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். வாக்குச்சாவடிகளுக்குச் சென்ற மம்தா பானர்ஜி, தேர்தல் அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்துள்ளார். வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள தேர்தல் பார்வையாளர்கள் பாஜகவின் பேச்சை கேட்டு செயல்படுவதாக குற்றம் சாட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கொடிகள் அகற்றப்பட்டதாகவும், தங்கள் கட்சித் தொண்டர்களைப் போலீஸார் கைது செய்வதாகவும் அவர் கூறினார்.
வன்முறை சம்பவங்கள்
பல இடங்களில் வன்முறை மற்றும் வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறுகள் பற்றிய புகார்கள் எழுந்துள்ளன. சாப்ராவில் (நதியா மாவட்டம்) பாஜக முகவர் ஒருவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. தலையில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல சாந்திபூரில் உள்ள பாஜகவின் தேர்தல் முகாம் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. பாங்கரில் ISF (Indian Secular Front) கட்சியின் முகவர்கள் பூத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வாக்குப்பதிவில் தாமதம்
வன்முறை நடந்த பகுதிகளில் இருந்து விரிவான அறிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. "அச்சமின்றி மக்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்" என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாப்ரா, சாந்திபூர், நிம்தலா மற்றும் பாங்கர் ஆகிய பகுதிகளில் வன்முறை காரணமாகப் பதற்றம் நிலவுகிறது. நிம்தலா போன்ற சில இடங்களில் தொழில்நுட்பக் கோளாறுகளால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி
வழக்கமாக இதற்கு முன்னர் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் மம்தா பானர்ஜி, வாக்குப்பதிவு நாளன்று வீட்டில்தான் இருப்பார். ஆனால், இந்த முறை வீதியில் இறங்கியிருக்கிறார். தனது சொந்த தொகுதியான பவானிபூரில், மம்தா பானர்ஜி வீதி வலம் மேற்கொண்டிருந்தார். இது பாஜகவை அதிருப்தியடைய செய்திருக்கிறது.
மம்தா பானர்ஜியின் சகோதரர் கார்த்திக் பானர்ஜி மற்றும் திரிணாமுல் தொண்டர்கள் வாக்குச்சாவடி அருகே திரண்டதால், 144 தடை உத்தரவைச் சுட்டிக்காட்டி போலீஸார் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications