மோடி அரசு அதிரடி! சென்னை- கோவை போலவே.. தமிழகத்திற்கு 7 புது வந்தே பாரத்! எந்த ரூட்களில் தெரியுமா
டெல்லி: இந்தியா முழுக்க 31 ரூட்களில் விரைவில் வந்தே பாரத் ரயில்கள் வர உள்ளது. அதிலும் குறிப்பாகத் தமிழகத்திற்கு மட்டும் புதிதாக 7 ரூட்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ரயில்களில் வசதியும் வேகமும் போதியளவில் இல்லை என்று எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை உருவாக்கியுள்ளார்கள்.
தானியங்கி கதவுகள், முற்றிலும் ஏசி, பயோ கழிப்பறைகள் என்று இந்த வந்தே பாரத் ரயில்கள் முழுக்க ஏகப்பட்ட வசதிகள் இருக்கின்றன. அதிலும் இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது மற்றொரு சிறப்பாகும்.

வந்தே பரத்: இந்த வந்தே பாரத் ரயில்களில் முதலில் டெல்லி- கான்பூர்- அலகாபாத்- வாரணாசி வழித்தடத்தில் 2019, பிப்ரவரி 15இல் இயக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பல வழித்தடங்களில் இவை விரிவுபடுத்தப்பட்டது. நாடு முழுக்க 15 ரூட்களில் இப்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை மேலும் வேகமாக அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுக்க விரைவில் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்பதே ரயில்வே-இல் இலக்காக உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏற்கனவே சென்னை- பெங்களூர்- மைசூரு இடையே வந்தே பாரத் சேவை உள்ளது. அதேபோல கடந்த மாதம் தான் சென்னை- கோவை வந்தே பாரத் ரயிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதமர் மோடி நேரில் வந்து இதைத் தொடங்கி வைத்தார். இதற்கு மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.
75 ரயில்கள்: ஏற்கனவே டிக்கெட்டுகள் மளமளவென விற்றுத் தீர்ந்து வருகிறது. இதற்கிடையே மிக வேகமாக இன்னும் சில வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்திற்குக் கிடைக்க உள்ளது. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலைக் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அதேபோல கேரளாவிலும் சில வாரங்களுக்கு முன்பு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 75 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை நாடு முழுக்க இயக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் திட்டமாக உள்ளது.இந்த 75 ரயில்களில் 31 ரயில்கள் மிக விரைவில் தொடங்கப்படும். மேலும், இந்த ரயில்களின் ரூட்கள் குறித்தும் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. மும்பை - மட்கான், ஜபல்பூரில்- இந்தூர், ஹவுரா முதல் பூரி, செகந்திராபாத் முதல் புனே வழித்தடங்களில் விரைவில் வந்தே பாரத் வர உள்ளது.
இது தவிர மங்களூர்- மைசூர் மற்றும் இந்தூரில் இருந்து ஜெய்ப்பூர் ரூட்களும் பரிசீலனையில் உள்ளது. ஜெய்ப்பூரில் இருந்து ஆக்ரா, டெல்லியில் இருந்து கோட்டா மற்றும் டெல்லியிலிருந்து பிகானேர் வரையும் வந்தே பாரத் இயக்கப்பட உள்ளது. மும்பையிலிருந்து உதய்பூர், ஹவுரா சந்திப்பு முதல் பொகாரோ எஃகு நகரம் மற்றும் ஹவுரா சந்திப்பிலிருந்து ஜாம்ஷெட்பூர் உள்ளிட்ட வழித்தடங்களிலும் மிக விரைவில் வந்தே பாரத் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு: தமிழ்நாட்டிலும் கூட சில குறிப்பிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைக் கன்னியாகுமரியுடன் இணைக்கும் வகையில் சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் இயக்கவும் முடிவு செய்துள்ளனர். விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல், பெங்களூரு முதல் கோவை, எர்ணாகுளம் சந்திப்பு முதல் சென்னை சென்ட்ரல் வரையிலும் வந்தே பாரத் வர உள்ளது.
அதேபோல சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரையிலும், சென்னை சென்ட்ரல் முதல் செகந்திராபாத், பெங்களூரிலிருந்து கன்னியாகுமரி வரையிலான ரூட்களிலும் வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
ஆர்வம்: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்திய நடுத்தர மக்களின் தேர்வாக மாறி வருகிறது. வந்தே பாரத் ரயில்களால் அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்ல முடியும். இவை அதிவேக ரயில்கள் என்பதால் பயண நேரம் வெகுவாக குறைகிறது. இவை சதாப்தி ரயில்களை விட வேகமானதாகும், மேலும், இந்த ரயில்களில் வசதியும் சதாப்தியை காட்டிலும் அதிகமாகும். இதுபோன்ற வசதிகள் இருப்பதாலேயே கட்டணம் அதிகம் என்ற போதிலும், நடுத்தர வர்க்கத்தினர் இதில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications