புயலை கிளப்பும் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா - தனிநபர் உரிமையை பறிக்கிறதா? ஏன் இவ்வளவு எதிர்ப்பு?
டெல்லி: சிறைக் கைதிகள், குற்றவாளிகளின் கைரேகை மட்டுமின்றி உயிரியல் அடையாளங்களை அவர்களின் எதிர்ப்பை மீறி சேகரித்து வைக்கும் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா என்றால் என்ன? அதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு என்பதை விரிவாக காண்போம்.
சிறைக் கைதிகள், குற்றவாளிகளின் கருவிழி, ரத்தம் உள்ளிட்ட உயிரியல் மாதிரிகளை சேகரித்து வைக்கும் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா மீது மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று உரையாற்றினார்.
கடந்த வாரம் திங்கட்கிழமை மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவால் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றவியல் நடைமுறை அடையாள மசோதாவுக்கு அப்போதே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நீக்கப்படும் 102 ஆண்டுகால பழைய மசோதா
102 ஆண்டுகள் பழமையான 'கைதிகள் அடையாள சட்டம் - 1920'ஐ நீக்கிவிட்டுதான் தற்போது மத்திய அரசு புதிதாக குற்றவியல் நடைமுறை அடையாள மசோதாவை கொண்டு வந்திருக்கிறது. பழைய சட்டத்தின்படி கைது செய்யப்படுபவர்களின் கைவிரல் ரேகைகள், கால் விரல் ரேகைகளை மட்டுமே பதிவு செய்து சேகரிக்க முடியும். அதுவும் கைது செய்யப்பட்ட அனைவரிடமும் சேகரித்துவிட முடியாது.

அமித்ஷா கொண்டு வரும் புதிய சட்டம்
இதற்கு மாற்றாக தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வர முயலும் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதாவின்படி காவல்துறை, சி.பி.ஐ., என்.ஐ.ஏ. போன்ற விசாரணை நிறுவனங்கள் கைது செய்யப்படுபவர்கள், குற்றவாளிகளின் கைவிரல் மற்றும் கால் விரல் ரேகைகள் மட்டுமின்றி அனைத்து வகையான உயிரியல் மாதிரிகளையும் சேகரிக்க முடியும்.

எதையெல்லாம் இச்சட்டத்தின்கீழ் சேகரிக்க முடியும்?
இந்த மசோதா மக்களவை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக இயற்றப்பட்டால், குற்றவாளிகள், கைது செய்யப்படுபவர்களின் இரத்தம், விந்து, எச்சில், வியர்வை, தலைமுடி, விரல் நக துண்டுகள், டி.என்.ஏ. மாதிரிகள் ஆகியவற்றை சேகரிக்க முடியும். அதுமட்டுமின்றி மருத்துவரின் உதவியுடன் இதர மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு அதன் முடிவுகளையும் சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.

யாரெல்லாம் இச்சட்டத்திற்குள் வருகிறார்கள்?
யார் யாருடைய மாதிரிகளை சேகரிக்க முடியும் என்றும் இச்சட்ட மசோதா விளக்கி இருக்கிறது. அதில், ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்கள், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களிடம் இந்த உயிரியல் மாதிரிகளை சேகரிக்க முடியும். தற்போது நடைமுறையில் உள்ள 102 ஆண்டு பழைய சட்டத்தின்கீழ் ஓராண்டுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்களிடம் மட்டுமே கைரேகை மாதிரிகளை சேகரிக்க முடியும்.

உயிரியல் விபரங்களை வழங்க மறுக்கலாமா?
குற்றவாளியோ, சிறை தண்டனை பெற்றவரோ காவல்துறை கோரும் உயிரியல் அடையாளங்களை வழங்க மறுத்தால், அவர்களிடம் வலுக்கட்டாயமாக சேகரிக்கலாம் என இந்த சட்ட மசோதா அனுமதி அளிக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் அல்லாமல் வேறு வழக்குகளில் கைது செய்யபட்டு ஏழு ஆண்டுகளுக்கு குறைவான சிறை தண்டனை பெற்றவர்கள் உயிரியல் விபரங்களை மறுக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், இது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று பலரால் விமர்சிக்கப்படுகிறது.

எத்தனை ஆண்டுகள் யாரால் இந்த விபரங்கள் சேகரிக்கப்படும்?
இவ்வாறு சேகரிக்கப்படும் உயிரியல் மாதிரிகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் சேமிக்கப்படும். இந்த மாதிரிகள் சேமிக்கப்படும் நாளிலிருந்து 75 ஆண்டுகள் அவை பாதுகாக்கப்படும் என இச்சட்டம் கூறுகிறது. மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழக்கு விசாரணைக்காக இந்த மாதிரிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அதே நேரம் முதல் முறை குற்றம் செய்பவர்களிடம் சேகரிக்கப்படும் மாதிரிகள் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிந்த பின்னர் அழிக்கப்படும் என இச்சட்ட மசோதாவில் கூறப்பட்டு இருகிறது.

சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு ஏன்?
இப்படி ஒரு சட்டம் வரப்போகிறது என்று தெரிந்தவுடனே எதிர்க்கட்சித் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் என பலரும் இதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த வாரம் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார்கள். இந்த சட்டம் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என காங்கிரஸ் எம்.பி மனிஷ் திவாரி தெரிவித்தார். இது நாளை போதைப்பொருள் பகுப்பாய்வு, மூளை பரிசோதனை வரை கொண்டு செல்லும் என அவர் அச்சம் தெரிவித்தார்.

அரசியலமைப்புக்கு எதிரானது என வாதம்
கடந்த 2010 ஆம் ஆண்டு கர்நாடக அரசு - செல்வி வழக்கில், தனிநபரின் அனுமதி இன்றி அவருக்கு தெரியாமல் அவரது மாதிரிகளை எடுத்து விசாரணை செய்வது அரசியலமைப்பு பிரிவு 20க்கு எதிரானது என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை சுட்டிக்காட்டும் வழக்கறிஞர்கள் பலர் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் எத்தகைய சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் கொண்டு வர முடியாது என கூறுகின்றனர்.

தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்பு
இதுகுறித்து INTERNET FREEDOM FOUNDATION என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தனது கவலையை பதிவு செய்துள்ளது. "இந்த புதிய சட்டத்தின் நோக்கம் கைதிகளை அடையாளப்படுத்துவது என்பதை கடந்து குற்றம்சாட்டப்பட்டவரின் குற்றத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இந்த மசோதாவில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால் இதை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. குற்றவியல் விசாரணைக்காக டி.என்.ஏவை காவல்துறை பயன்படுத்தும் மசோதா தனியாக விவாதத்தில் உள்ளது. இந்த சூழலில் காவல்துறை ஒருவரின் டி.என்.ஏ.வை சேகரித்து பயன்படுத்த முடியுமா என்ற விபரம் இதில் தெளிவாக இல்லை." என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அடுத்தக்கட்ட நகர்வு ஆபத்தானது
இதுகுறித்து இணைய உரிமைகள் ஆய்வாளர் ஸ்ரீநிவாஸ் கோடாலி தெரிவிக்கையில், "தேசிய குற்ற ஆவண காப்பகம் தேசிய அளவிலான தானியங்கி முக அங்கீகார கட்டமைப்பு (Automated Facial Recognition System) மற்றும் கைரேகையை கண்டறியும் கட்டமைப்புகளை (Automated Fingerprint Recognition) நிறுவுவதற்கான தரவுதளத்தை அமைத்து வருகிறது. 360 டிகிரி கோணங்களில் மக்களின் அனைத்து விபரங்களை சேகரித்து வைத்துக்கொள்ள விரும்புகிறது. இச்சட்டத்தை அதன் அடுத்தக்கட்ட நகர்வாகவே பார்க்க முடிகிறது." என்றார்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications