என் கையை பிடித்து அரசியலுக்கு வந்தவர் மோடி.. அது இவ்வளவு பாதிப்பை தரும் என நினைக்கவில்லை! சரத் பவார்
டெல்லி: பிரதமர் மோடியின் அரசியல் வருகை தொடர்பாகச் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு மூத்த அரசியல்வாதி சரத் பவார் பட்டென பதில் அளித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த 2.5 ஆண்டுகளாக சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. இருப்பினும், ஷிண்டே ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கவே ஆட்சி சீக்கிரம் முடிவுக்கு வந்தது.
இப்போது அங்கு ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பாஜக ஆட்சியில் உள்ளது. யார் உண்மையான சிவசேனா என்ற பஞ்சாயத்தும் தேர்தல் ஆணையத்திலும் கோர்டிலும் நடந்து வருகிறது

தாக்கு
அது ஒரு புறம் இருக்க ஆட்சியில் இருக்கும் சிவசேனா- பாஜக கூட்டணி அரசின் செயல்பாடுகளை அங்குள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சரத் பவார், ஆளும் பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்தார்.

நினைக்கவில்லை
பிரதமர் நரேந்திர மோடி முன்பு ஒரு முறை சரத் பவார் வழிகாட்டுதலின்படியே அரசியலுக்கு வந்ததாகவும் அவரது கையை பிடித்தே அரசியலுக்கு வந்ததாகவும் கூறி இருந்தார். இதை நினைவுகூர்ந்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த பவார், "அது இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என ஒரு போதும் நினைக்கவில்லை" என்று பதில் அளித்தார்.

பிரதமர் வேட்பாளர்
81 வயதாகும் சரத் பவார், அடுத்து வரும் 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அவர், "இந்த வயதில் எந்தப் பொறுப்பையும் ஏற்க விரும்பவில்லை" என்று திட்டவட்டமாகப் பதில் அளித்தார். மேலும், "பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளை ஒன்றிணைக்க மட்டுமே நான் உதவுவேன்" என்று அவர் தெரிவித்தார்.

வாக்குறுதிகள் என்னாச்சு
தொடர்ந்து பாஜகவைச் சாடி பேசிய அவர், "2014ஆம் ஆண்டு பாஜக பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து அரசியலுக்கு வந்தனர். இருப்பினும், அவர்கள் எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. கிராமங்களுக்கு நல்ல காலம் வந்துவிட்டதாகச் சொன்னார்கள். இணையம் மூலம் கிராமங்களை இணைப்பது, கழிப்பறைகள், குடிநீர் வழங்குதல், அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் என அவர்கள் முன்வைத்த எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

ஜனநாயகம்
சிறிய கட்சிகளை ஆட்சிக்கு வரக் கூடாது என்பதே அவர்களின் நோக்கம். சிபிஐ போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் அவர்கள் இதைச் செய்ய முயல்கிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு நிறுவனங்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதே தாக்குதல் நடத்துகின்றனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயம்.

மகாராஷ்டிரா
பாஜக அல்லாத அனைத்து மாநிலங்களிலும், அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களைப் பிரித்து ஆட்சியைப் பிடிக்க முயல்கிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் தான் மகாராஷ்டிரா" என்றார். மத்தியப் பிரதேசம், கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்களே பாஜகவில் இணைந்தனர். இதனால் அங்கெல்லாம் ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications