ரூ. 8 லட்சம் ஆண்டு வருமானம்.. 5 ஏக்கர் நிலம்! 10% இட ஒதுக்கீடு பெற கட்டுப்பாடுகள் என்னென்ன
டெல்லி: பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்ஜாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அது யாருக்கெல்லாம் பொருந்தும் என்பதைப் பார்க்கலாம்.
மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை வழங்கியது. அப்போதே இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு கிளம்பியது.
Economically Weaker Sections (EWS) எனப்படும் இந்த இட ஒதுக்கீட்டில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு கூறியது.

நீதிமன்றம்
இருப்பினும், அப்போதே இதைப் பல மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளவில்லை.. இருந்த போதிலும், மத்திய அரசின் நிறுவனங்களிலும் பாஜக ஆளும் மாநிலங்களிலும் இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வந்துவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது, இதற்கிடையே இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 3-2 என்ற பெரும்பான்மை அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

யாருக்கு
இந்த 10% இட ஒதுக்கீடு யாருக்குக் கிடைக்கும்.. இந்த விதிமுறைகள் எப்படி உருவாக்கப்பட்டது என்பதைப் பார்க்கலாம். முன்னேறிய வகுப்பினருக்கு மட்டுமே இந்த 10% இட ஒதுக்கீடு பொருந்தும். அதாவது மற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த 10% இட ஒதுக்கீடு கிடைக்காது. முன்னேறிய வகுப்பில் இருக்கும் ஏழைகளுக்கு மட்டுமே இந்த 10% இட ஒதுக்கீடு கிடைக்கும். இதற்கு அவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

ரூ. 8 லட்சம் வருமானம்
அதேநேரம் இந்த ரூ. 8 லட்சம் என்ற வரைமுறைக்கும், 10% என்ற இட ஒதுக்கீடு அளவையும் வரையறுப்பதற்குக் குறிப்பிட்ட அடிப்படை எதுவும் அமைச்சரவையிடம் இல்லை என்று பிரபல ஆங்கில ஊடகமான தி வயர் செய்தி வெளியிட்டு உள்ளது. 2005இல் அமைக்கப்பட்ட சின்ஹோ கமிஷனின் பரிந்துரைகளை அரசு இந்த மசோதாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.. அதேநேரம் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்புக்கு அந்த ஆணையம் கொடுத்த வரையறை நிராகரிக்கப்பட்டு உள்ளது. அதற்கான தெளிவான காரணங்கள் தெரியவில்லை.

ஏன் இந்த முடிவு
மேலும், அதில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இருப்பினும், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் யார் என்பதே பெரும் விவாதத்திற்கு உட்பட்டது என்பதால், ஓபிசி பிரிவினருக்கு கிரிமே லேயருக்கு நிர்ணயிக்கப்பட்ட வருமான வரம்பின் அடிப்படையில் இந்த 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கிரீமி லேயர்
அமைச்சரவைக் குறிப்பின்படி, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு (SEBCs) உள்ள கிரீமி லேயருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று 1993இல் நிபுணர் குழு அளித்த அளவுகோல் அடிப்படையிலேயே இந்த ரூ.8 லட்சம் வருமான வரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. எனவே, ரூ.8 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ள முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த இட ஒதுக்கீட்டிற்குத் தகுதி பெற்றவர்களாகக் கருதலாம்.

நிலம்
மேலும், ஐந்து ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட விவசாய நிலத்தை வைத்திருக்கக் கூடாது. 1000 சதுர அடி அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு பொருந்தாது. இதுபோன்ற சில விதிமுறைகள் உள்ளன. ஆனால், மத்திய அரசின் இந்த அளவுகோல்களையும் எதன் அடிப்படையில் அமைத்தது என்பதற்குத் தெளிவான குறிப்புகள் இல்லை.

10% இட ஒதுக்கீடு
அதேபோல, இட ஒதுக்கீடு ஏன் 10% ஆக நிர்ணயிக்கப்பட்டது என்பது பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை. 2011-12 எடுக்கப்பட்ட சர்வே-இல் தேசிய சராசரி தனிநபர் செலவினத்துடன் ஒப்பிடும்போது, எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரைக் காட்டிலும் அதிகப்படியான பொதுப் பிரிவினரின் தனிநபர் செலவினமே குறைவாக உள்ளது. இதை மேற்கொள் காட்டியே 10% இட ஒதுக்கீடு முன்னேறிய பிரிவினருக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications