ஜாமீன் ஏன் கேட்கவில்லை.. கெஜ்ரிவால் தரப்பிடம் கேட்ட நீதிபதிகள்.. உச்ச நீதிமன்றத்தில் பரபர வாதம்
டெல்லி: பிணைக்கேட்டு ஏன் மனு தாக்கல் செய்யவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பிற்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு 'தனது கைது நடவடிக்கையே தவறு என்பது தான் எங்களது நிலைப்பாடாக இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி ஜாமீன் கேட்க முடியும்' என்று அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பினர் பதில் தெரிவித்தனர்.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்த வழக்கில் டெல்லி முதல்வரான கெஜ்ரிவால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் நிலையிலும் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை.

கடந்த 1 ஆம் தேதியில் இருந்து திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு கடந்த 20-ந் தேதி அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் 734 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை தாக்கல் செய்தது, அதில், அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை வகுப்பதில் நேரடியாக ஈடுபட்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது தொடர்பு குறித்த ஆதாரங்கள் தெரிய வந்தன. கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழலில் மூளையாகவும், முக்கிய சதிகாரராகவும் இருந்தார். எனவே, கெஜ்ரிவாலின் மனுவில் முகாந்திரம் இல்லை என்றும் அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை பதில் மனுவில் தெரிவித்து இருந்தது.
இதனிடயே, கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிணைக்கேட்டு ஏன் மனு தாக்கல் செய்யவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பிற்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதில் கூறிய அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பினர், தனது கைது நடவடிக்கையே தவறு என்று தான் எங்களது நிலைப்பாடாக இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஜாமீன் கேட்க முடியும்.
இதனால் தான் நாங்கள் நேரடியாக கைது நடவடிக்கையையே ரத்து செய்யுங்கள், அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பியதை சட்டவிரோதம் என்று அறிவியுங்கள் என்று நாங்கள் கேட்கிறோம் என்று பதில் வைத்தனர். இதற்காக சட்டவிரோதம் என்று சொல்வதற்கான சட்ட ஆதாரங்கள், சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் பிரிவு 19 இல் போதிய ஆதாரங்கள் இல்லாமல் என் மீது கைது நடவடிக்கை நடந்துள்ளது.
இதேபோல் இந்த வழக்கில் இதற்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையிலும் எனது பெயர் இடம்பெறவில்லை. எனக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்கள் கொடுத்திருக்கின்ற வாக்குமூலத்திலும் எனது பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
10 ஆவணங்கள், 15 முக்கிய சாட்சியங்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் என எதிலுமே எனக்கு எதிராக இல்லாத பட்சத்தில் எனக்கு கைது நடவடிக்கை நடந்துள்ளது. எனவே தான் நான் என்மீதான கைது நடவடிக்கையை சட்டவிரோதம் என்று சொல்கிறேன். என்று அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications