கூட்டம் அதிகமாக இருப்பது தெரிந்தும்.. விஜய்யை வழியிலேயே தடுத்து நிறுத்தாது ஏன்! தமிழ்நாடு அரசு பதில்
டெல்லி: கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பல்வேறு வாதங்களை முன்வைத்தது. குறிப்பாக விஜய்யை ஏன் பாதியிலேயே தடுத்த நிறுத்தவில்லை என்பது தொடர்பாகத் தமிழக அரசு முக்கிய வாதங்களை முன்வைத்தது.
கரூரில் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை இப்போது சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

வில்சன்
அப்போது இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று மனுதாரர்கள் சார்பில் வாதங்களை முன்வைக்கப்பட்டன. இருப்பினும், சிபிஐ விசாரணை தேவையில்லை என்று தமிழக அரசு சார்பில் ஆஜரான வில்சன் தெரிவித்தார். மேலும், வில்சன் இந்த வழக்கில் பல்வேறு வாதங்களை முன்வைத்தார், சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க கரூர் அரசு மருத்துவமனைக்குக் கூடுதலாக 220 மருத்துவர்கள் மற்றும் 165 செவிலியர்கள் அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார். அண்டை மாவட்டத்தில் நடந்த மருத்துவ மாநாட்டில் பங்கேற்க வந்தவர்கள், கரூருக்கு வரவழைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
போலீசார்
உயிரிழப்புகள் அதிகரித்ததால் ஏற்பட்டதால், கூடுதலாக மீட்புப் படையினர் திரட்டப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார். உயிரிழந்தோர் உடல்களை உடனடியாக ஒப்படைக்கக் கோரி உறவினர்கள் வலியுறுத்தியதாகவும் இதனால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர 606 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தடுத்து நிறுத்தாது ஏன்
விஜய்யை ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்பது குறித்து விளக்கமளித்த வில்சன், "ஆரம்பத்தில் 10,000 பேர் மட்டுமே கூடுவார்கள் என்று கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், சம்பந்தப்பட்டவர் ஒரு பிரபல நடிகர் என்பதால், கூட்டம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகரித்தது. இத்தகைய சூழ்நிலையைச் சம்பந்தப்பட்ட நபரைப் பாதியில் நிறுத்த முடியவில்லை.
பிற்பகல் 12 மணிக்கு வர வேண்டியவர் இரவு 7 மணிக்குத் தான் வந்தார். அந்த நடிகர் வந்தபோது, கூட்டத்தில் இருந்த பலர் ஏற்கனவே நீரிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் அவர்கள் மயக்கமடையத் தொடங்கினர். இதை அறிந்த நடிகர் தனது வாகனத்தில் இருந்தே தண்ணீர் பாட்டில்களை வீசினார்" என்று தெரிவித்தார்.
சுப்ரீம் கோர்ட் கேள்வி
முன்னதாக உயிரிழந்தோரின் உடல்களை எப்படி 4 மணி நேரத்தில் பிரேதப் பரிசோதனை செய்தீர்கள் என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்குத் தமிழக அரசு சார்பில், "இந்தச் சம்பவத்தால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாகப் பிரேதப் பரிசோதனை செய்ய கலெக்டர் அனுமதி அளித்தார். அருகிலுள்ள மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. அருகே உள்ள மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு இருந்தது" என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது சட்டவிரோதமானது என்றும் தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதை ஏற்ற சுப்ரீம் கோர்ட், தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications