டெல்லி ACP மேல்.. பாலியல் புகார் அளித்த பத்திரிகையாளர் மீது SC/ST வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு
டெல்லி: டெல்லி கன்னாட் பிளேஸ் பிரிவு காவல் உதவி ஆணையர் (ACP) விவேக் பகத் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது பாலியல் சீண்டல் கம்ப்ளைன்ட் கொடுத்த பெண் பத்திரிகையாளர் மீது SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 3ம் தேதி ACP விவேக் பகத் மீது பத்திரிகையாளர் ரோஸி பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது ACP விவேக் பகத் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரோஸி மீது SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களை கட்டுப்படுத்த விவேக் பகத் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து மண்டபங்கள், சமுதாய கூடங்களில் அடைத்து வைத்தனர். இப்படி கைது செய்யப்பட்டவர்களில் AISA தலைவர் நேஹா போராவும் ஒருவர். நேஹா கைது செய்யப்பட்டவுடன், அதை ரோஸி வீடியோ எடுத்தார். அப்போது ACP விவேக் பகத் தன்னை தவறான முறையில் தொட்டார் என்று ரோஸி பாலியல் குற்றச்சாட்டை எழுப்பினார்.
விவேக் பகத் தன்னிடம் தவறாக நடந்துக்கொள்ள முயன்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றார். ஆனால், போலீஸ் தரப்பில் புகாரை பதிவு செய்யவில்லை. ஏற்கெனவே மத்திய அரசு மீது கடும் அதிருப்தியில் இருந்த CJP உள்ளிட்ட அமைப்பினருக்கு இந்த விஷயம் இன்னும் கோபத்தை தூண்டியது. பாதிக்கப்பட்ட பத்திரிகையாளருடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு CJP அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ஆனாலும் இதுவரை FIR பதிவு செய்யப்படவில்லை.
ஆனால், இந்த புகார் டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை மட்டும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோக்கள் அனைத்தும் AI தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டவை என்று டெல்லி காவல்துறை கூறி வருகிறது.
நிலைமை இப்படி இருக்கையில், தற்போது ACP விவேக் பகத் தனது தரப்பில் புகாரை கொடுத்திருக்கிறார். டெல்லி நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் அவர் கொடுத்திருக்கும் புகாரின் அடிப்படையில் பத்திரிகையாளர் ரோஸி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அக்.3ம் தேதி பூட்டா சிங் சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது சாதிய ரீதியாக தங்களை அவமதித்ததாகவும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பத்திரிகையாளர் ரோஸி, பொதுமக்களுக்கு முன்னிலையில் தனது பெயர் மற்றும் சாதி அடையாளத்தை சுட்டிக்காட்டி, சாதிய ரீதியான இழிவான கருத்துக்களை கூறியதாக விவேக் குற்றம்சாட்டியிருக்கிறார்.
தான் பட்டியல் சாதியை சேர்ந்தவர் என்பதால், என்னுடைய சாதி மற்றும் ACP-ஆக நான் நியமிக்கப்பட்டது குறித்தும் அவதூறான கருத்துக்களை பேசப்பட்டதை நானும் என்னுடன் பணியில் இருந்த காவலர் ரவி தஹியாவும் நேரடியாக கேட்டதாக புகாரில் விவேக் கூறியிருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளாக பத்திரிகையாளர் ரோஸி, அவரது உதவியாளரான கஜேந்திரா மற்றும் பெயர் அறியப்படாத மற்றொரு நபர் என்று 3 பேர் மீது FIR பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கூட்டு சதி, SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
புகார் கொடுத்தவர் மீதே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டிருப்பதும், அந்த புகாரை வாங்கி உடனே வழக்குப்பதிவு செய்திருப்பதும் பல்வேறு சந்தேகங்களை கிளப்புவதாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
