குளுகுளு கொடைக்கானலில் கோல்ஃப்..எல்லோரும் நல்லாருக்கீங்களா? முதல்வரைச் சூழ்ந்த மக்கள்..செல்ஃபி தான்!
திண்டுக்கல்: கொடைக்கானலில் ஓய்வெடுக்க வந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்பெற்ற கோல்ஃப் மைதானத்தில் சிறிது நேரம் விளையாண்டார். முதலமைச்சர் ஸ்டாலின் வந்திருப்பதை அறிந்து அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில் அவர்களிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தற்போது கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

ஐந்து நாள் பயணமாக தனது குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் சென்றுள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்குச் சென்ற முதலமைச்சர் அங்கிருந்து கார் மூலமாக கொடைக்கானல் சென்றார். இதையடுத்து அங்கு தனியார் தங்கும் விடுதியில் முதலமைச்சர் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். வரும் வெள்ளிக்கிழமை அதாவது மே மூன்றாம் தேதி வரை கொடைக்கானலில் தங்கி இருக்கும் முதலமைச்சர் நான்காம் தேதி சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொடைக்கானலில் ஓய்வு: முதலமைச்சர் ஸ்டாலின் வருகை ஒட்டி கொடைக்கானலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொடைக்கானலில் நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் பார்வையிடவுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வுக்காக கொடைக்கானல் வந்திருக்கும் நிலையில் அவரை கட்சியினர் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அவர் செல்லும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோல்ஃப் விளையாடிய முதல்வர்: இந்நிலையில் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வு எடுத்த முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று மாலை வேளையில் பசுமை பள்ளத்தாக்கு அருகே இருக்கக்கூடிய கோல்ஃப் மைதானத்தில் சிறிது நேரம் விளையாடினார். அப்போது அந்த மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகளுடன் சிறிது நேரம் உரையாடினார்.

பொதுமக்களுடன் செல்ஃபி: அதனை தொடர்ந்து அந்த பகுதியில் வந்து இருந்த சுற்றுலாப் பயணிகள் முதல்வர் ஸ்டாலின் விளையாடியதை ஆர்வத்துடன் கண்டு ரசித்து சென்றனர். தொடர்ந்து மைதானத்தில் விளையாடிவிட்டு திரும்பி வரும்பொழுது அங்கிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் கடை வியாபாரிகளிடம் வணக்கம் தெரிவித்தும் நலம் விசாரித்தார். முதலமைச்சருடன் அவர்கள் செல்பி புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டிய நிலையில், அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட முதலமைச்சர் பின்னர் தான் தங்கியிருந்த விடுதிக்கு புறப்பட்டுச் சென்றார், முன்னதாக முதலமைச்சர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications