திண்டுக்கல்லுக்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்.. கொடைக்கானலுக்கு வரப்போகும் மாஸ் திட்டம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற அரசு விழாவில், ரூ. 1595 கோடியில் 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 111 முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழக இந்து அறநிலையத் துறை, மின்சாரம், வருவாய்த்துறை உள்ளிட்ட ஏழு துறைகளை சார்ந்த 174.20 கோடி மதிப்பிலான 212 புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், விழா மேடையில் வருவாய் துறை உள்ளிட்ட 18 துறைகள் மூலம் 2 லட்சத்து2, 62,864 பயனாளிகளுக்கு ரூபாய் 1000 கோடியே 82 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார்.

திண்டுக்கல்லில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் 50 புதிய பேருந்து சேவைகளையும் முதல்வா் தொடங்கிவைத்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், சக்கரபாணி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல்லுக்கு 8 புதிய அறிவிப்புகள்
தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் ரூ. 16 கோடியில் நிறைவேற்றப்படும்.
திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள பழைய பாதள சாக்கடைகள், சுத்திகரிப்பு நிலையம் ரூ. 8 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும்.
பழனி இடும்பன் குளம், சண்முகாநதி ரூ. 6 கோடியில் சீரமைக்கப்படும்.
புதிய நத்தம் கலை அறிவியல் கல்லூரிக்கு 18.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.
ஒட்டன்சத்திரம் மார்க்கம்பட்டி பகுதியில் முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் ஆலை ரூ. 7 கோடியில் அமைக்கப்படும்.
கொடைக்கானல் மலைப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 100 ஏக்கர் பரப்பளவில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சுற்றுலா முதலீட்டு பூங்கா அமைக்கப்படும்.
ஒட்டன்சத்திரத்தில் அதிக குடியிருப்புகள் இருக்கும் பகுதியில் ரூ. 17 கோடி மதிப்பில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படும்.
ஏற்றுமதியாகும் கண்வலி கிழங்குக்கு நியாயமான நிலையான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications