கன்னிவாடியில் அடங்கிய காதலியின் உயிர்.. உருத்தெரியாமல் சிதைத்த காதலன்! காட்டிக் கொடுத்த ஆறாம் விரல்!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கன்னிவாடி மலைப் பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு வாரத்திற்கு பின்பு கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளத்தை கண்டுபிடித்துள்ள போலீசார் கொலையாளியை கைது செய்தனர். ஆதரவற்ற இல்லத்தில் தங்கி இருந்த பெண்ணை காதலிப்பதாக கூறி அழைத்து வந்து கொலை செய்து உடலை எரித்த காதலன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மலைகள் அதிகம் சூழ்ந்த பகுதி என்றால் அது திண்டுக்கல் தான். நத்தம், ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் என சுற்றிலும் மலைப்பகுதிகள் இருக்கிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே கன்னிவாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அமைதி சோலை பகுதியில் கடந்த 13ஆம் தேதி ஆடு மேய்க்க சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு உடல் முழுவதும் எரிந்த நிலையில் அடையாளமே காண முடியாத அளவுக்கு இளம் பெண் ஒருவரின் சடலம் கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் கன்னிவாடி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் முழுவதும் எரிந்ததால் அந்த பெண் யார் என்பதை அடையாளம் காண முடியவில்லை. இதற்கிடையே அந்த பெண்ணுக்கு ஆறாவதாக ஒரு விரல் இருப்பதும் உடற்கூறு ஆய்வில் தெரிய வந்தது. தொடர்ந்து திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய பகுதிகளில் காணாமல் போன பெண்களின் விவரங்களை சேகரித்த போலீசார் ஆறாவது விரலுடன் யாராவது காணாமல் போனார்களா என விசாரித்தனர்.
இதற்கிடையே மதுரையில் ஆதரவற்ற இல்லத்தில் இருந்து இளம் பெண் ஒருவர் மாயமானது தெரிய வந்தது. இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் மீட்கப்பட்ட சடலம் மதுரை பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவருடையது என தெரிய வந்தது. பெற்றோரை இழந்த இவர் மதுரையில் ஆசிரமத்தில் வளர்ந்திருக்கிறார். இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி எமக்கல்லாபுரத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவர் உடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து திண்டுக்கல் வந்த மாரியம்மாள், பிரவீன் கடை ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார்கள்.
கடந்த ஒரு வருடமாக இருவரும் ஒன்றாக தங்கி இருந்த நிலையில் மாரியம்மாள் இரண்டு முறை கருத்தரித்துள்ளார். ஆனால் தற்போதைக்கு குழந்தை வேண்டாம் என பிரவீன் அவரை கருக்கலைப்பு செய்ய வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மாரியம்மாள் பிரவீனை தொடர்ந்து வற்புறுத்தியதால் இருவருக்கும் இடையே பிரச்சனை முற்றியுள்ளது. இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி மாரியம்மாளை அமைதி சோலை பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் பிரவீன்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் வண்டியில் இருந்து தள்ளி விட்டதாகவும், இதில் தலையில் காயமடைந்த மாரியம்மாள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த பிரவீன் அடையாளம் தெரியாத அளவுக்கு இளம் பெண்ணின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதற்கிடையே மாரியம்மாள் மாயமானதும் அதற்கு பிறகு பிரவீன் அப்பகுதிக்கு சென்றதும் விசாரணையில் தெரிய வந்த நிலையில் பிரவீனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் மாரியம்மாளை கொலை செய்ததை பிரவீன் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications