அமலாக்கத்துறை ரெய்டில் வேடசந்தூர் திமுக ஒ.செ. வீரா சாமிநாதன்!செந்தில் பாலாஜி கேஸ்? சீனியருக்கு குறி?
திண்டுக்கல்: வேடசந்தூர் திமுக பிரமுகர் வீரா எஸ்டி சாமிநாதன் வீடு, அலுவலகம் என மொத்தம் 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருபப்வர் வீரா எஸ்டி சாமிநாதன். வீரா குழுமங்கள் என்ற பெயரில் பல நிறுவனங்களையும் கல்வி நிறுவனமும் நடத்தி வருகிறார் வீரா எஸ்டி சாமிநாதன்.

இந்நிலையில் வேடசந்தூர் கொங்கு நகரில் உள்ள வீரா சாமிநாதன் வீடு, அலுவலகங்கள் என மொத்தம் 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையால் வேடசந்தூர் சட்டசபை தொகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
பின்னணி என்ன?: தமிழ்நாட்டின் உள் சட்டசபை தொகுதிகளில் ஒன்று வேடசந்தூர். இத்தொகுதியின் திமுக பிரமுகர் வீரா சாமிநாதனை அமலாக்கத்துறை இலக்கு வைத்து சோதனை நடத்துவது தொடர்பாக நாம் விசாரித்தோம். அப்போது, இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் வீரா சாமிநாதன் சில வர்த்தக தொடர்புகள் வைத்திருந்ததால் இந்த சோதனைகள் நடந்திருக்கலாம் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையின் போதே வீரா சாமிநாதனுக்கும் சிக்கல் வரும் என தெரியும் என்கின்றனர் சில பத்திரிகையாளர்கள்.
சீனியர் ஒருவருக்கு குறி?: அதேநேரத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இரு மூத்த அமைச்சர்கள் இருக்கின்றனர். இந்த இருவருமே வீரா சாமிநாதனுக்கு நெருக்கம்தான். இருந்த போதும் சில உறவுகள் அடிப்படையில் நெருக்கமாக இருக்கும் ஒரு அமைச்சருக்கு நெருக்கடி தர வேண்டும் என்பதற்காகவும் செந்தில் பாலாஜி வழக்கை பயன்படுத்தி வீரா சாமிநாதனிடம் இந்த சோதனை மேற்கொண்டிருக்கலாம் என்கிறது ஒருதரப்பு. இன்னொரு தரப்போ, திமுகவின் மூத்த அமைச்சர்கள் வரிசையில் இருப்பவர் அவர்தான்.. அவரது பெயர்தான் அமலாக்கத்துறை சோதனையில் அடுத்தடுத்து அடிபடுகிறது. ஆகையால் அந்த அமைச்சரை இழுத்துவிடும் வகையில்தான் வீரா சாமிநாதனிடம் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது என்கிறது இன்னொரு தரப்பு. வேடசந்தூர் சட்டசபை தொகுதியின் ஹாட் டாபிக்காக இதுதான் ஓடுகிறது.












Click it and Unblock the Notifications