நத்தம் முழுக்க கறி வாசம்! மலை போல் சோறு.. குளம் போல் கறிக் குழம்பு! கருப்பண்ணசாமிக்கு மெகா படையல்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தேத்தாம்பட்டி கோட்டை கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவை ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பிரம்மாண்ட கறி விருந்து நடைபெற்றது. 560 ஆட்டுக் கிடாய்கள் வெட்டப்பட்டு, 100க்கும் மேற்பட்ட மூட்டை கைக் குத்தல் அரிசி சமைக்கப்பட்டு சுவாமிக்கு படையல் போடப்பட்டது. பின்பு திருவிழாவில் கலந்து கொண்ட ஆண் பக்தர்களுக்கு விடிய விடிய பிரம்மாண்ட அசைவ விருந்து நடைபெற்றது.
தென் மாவட்டங்களில் பொதுவாக திருவிழா என்றாலே அது கறி விருந்துடன் மட்டுமே நடைபெறும். குறிப்பாக இரவு நேரத்தில் நடைபெறும் வினோத திருவிழாக்களில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் நடத்தப்படுகின்றன.
அப்படி பார்க்கையில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சிக் கருப்பண்ணசாமி கோயில், மேலூர் அருகே மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி, ஆண்கள் மட்டுமே நடத்தும் திருவிழாவில் 70 க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் பலியிடப்பட்டு மண்பானையில் வேப்பிலை வைத்து சமைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் இரண்டாவது வாரத்தில் எல்லை பிடரி அம்மன் கன்னிப் பெண் குலதெய்வத்தை ஆண்கள் மட்டுமே கூடி வழிபாடு செய்வது வழக்கம். இப்படி நிறைய இடங்களில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழாக்கள் பிரபலம். அப்படி ஒரு கோவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உண்டு..
அப்படி ஒரு கோவில் தான் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாணார்பட்டி ஒன்றியம் வி.டி.பட்டி ஊராட்சி தேத்தாம்பட்டியில் கோட்டை கருப்பணசாமி கோவில். சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த கோவிலில் பக்தர்கள் தாங்கள் வளர்த்த கிடாய்களை மட்டும் வெட்டி பூஜை செய்து வணங்குவதால் நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பாகவும், நல்ல விளைச்சலும், விளைபொருட்களுக்கு நல்ல விலையும் கிடைப்பதாக கிராம மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இந்தானடு திருவிழா நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், திருவிழாவை முன்னிட்டு பக்தர்களால் வழங்கப்பட்ட 560 ஆட்டு கிடாய்கள் சுவாமிக்கு பலி கொடுக்கப்பட்டது. அதிகாலை 1 மணி பொங்கல் வைக்கப்பட்டு கிடாய்கள் வெட்டப்பட்டது. பின்னர் அதன் தலைகளை கோட்டை கருப்பண்ணசாமி கோவில் முன்பு வைத்து, சாதத்தை உருண்டைகளாக உருட்டி பூஜை செய்தனர். அதனை தொடர்ந்து சாப்பாடு பரிமாறப்பட்டது. இந்த சாப்பாட்டினை வீட்டிற்கு கொண்டு செல்லக் கூடாது என்பதால் மீதமிருந்த உணவுகள் அங்கேயே மண்ணில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

இந்த விழாவில் வி.எஸ்.கோட்டை, கோவில்பட்டி, காமாட்சிபுரம், வடக்காம்பட்டி, பாலகவுண்டன்பட்டி, கம்பிளியம்பட்டி உள்பட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்த திருவிழா நடத்தப்படுகிறது.இதற்காக வயல்களில் விளைந்த நெல்மணிகளை கிராமத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேர்த்திக் கடனாக பெறப்படும். ஆடுகளை பலியிட்டு சமைத்து கோட்டை கருப்பண்ண சாமிக்கு படையலிட்டு அதை ஆண்களுக்கு மட்டுமே அன்னதானமாக வழங்கப்படும் என்றனர்.












Click it and Unblock the Notifications