முஸ்லிம், கிறிஸ்டீன், தலித்துக்கு “வீடு” இல்ல.. ஒட்டன்சத்திரம் பெண்ணின் “வெறி”! போலீஸ் வழக்குப்பதிவு
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே பட்டியல் தலித் மக்களுக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் வாடகைக்கு வீடு தரமாட்டோம் என பகிரங்கமாக பேசும் பெண்மணியின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சாதி ஒழிப்புக்காகவும் சமத்துவத்துக்காகவுமே தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்த தந்தை பெரியாரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
ஆனால் அன்றைய தினத்திலேயே சாதிவெறி, மதவெறி சம்பவங்கள் தமிழ்நாட்டின் பல இடங்களில் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தின. தந்தை பெரியார், அண்ணா போன்றோரின் உழைப்பால் தமிழ்நாட்டில் சாதி, மதவெறி பிற மாநிலங்களைவிட குறைவாகவே உள்ளது.

பட்டியலின சிறுவர்கள்
ஆனால், சமீப நாட்களாக கேள்விப்படும் சம்பவங்கள் சாதி, மதவெறி மீண்டும் தமிழ்நாட்டில் அதிகரிக்கிறதோ என்ற அச்சத்தை எழுப்புகின்றன. பெரியார் பிறந்தநாளன்றி சங்கரன்கோயில் அருகே பட்டியலின மக்களை உயர்சாதியினர் ஊரை விட்டே ஒதுக்கி வைத்து அந்த சமுதாய சிறுவர்களுக்கு கடையில் திண்பண்டம் வழங்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முஸ்லிம் சிறுவன்
அதே நாளில் சென்னை கோடம்பாக்கத்தில் மசூதியிலிருந்து வீட்டுக்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய சிறுவனை குல்லா அணிந்த காரணத்துக்காக ஒரு நபர் தாக்கிய நிகழ்வும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விரு நிகழ்வுகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீடு வாடகை
இந்த நிலையில்தான் மற்றொரு அதிர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாடகைக்கு வீடு வழங்காமல் நவீன் தீண்டாமை கடைபிடிக்கப்படும் கொடுமை வெட்டவெளிச்சமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சர்ச்சை வீடியோ
ஒட்டன்சத்திரம் அருகே நாயக்கனூரை சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மனைவி லட்சுமி, "தாழ்த்தப்பட்ட மக்கள், கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு வீடு வழங்க மாட்டேன். அவர்களால் வீட்டில் வளரும் குழந்தைகள் கெட்டுப் போவார்கள்." என பேசும் வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.

வழக்குப்பதிவு
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பெண் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய சரகம் நாயக்கனூர் பகுதியில் பட்டியலினத்தவர்கள் மற்றும் மாற்று மதத்தினருக்கு வீடு வாடகைக்கு தருவதில்லை என்று பெண் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருவதை அறிந்த ஒட்டன்சத்திரம் காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை செய்து வருகின்றனர்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications